ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலின் போது வன்முறையை கட்டவிழ்க்கும் நோக்குடன் வந்த மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் காவல்துறை வசம் சிக்கியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருக்கான தேர்தலில் திமுகவும், அதிமுகவும் தலா 7 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களைப் பெற்ற நிலையில், பெரும்பான்மையான 10 சீட்களை தக்கவைக்க இருதரப்பும் முயன்று வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தேமுதிக, சுயேச்சை உள்ளிட்ட மூன்று கவுன்சிலர்களை தன் பக்கம் கொண்டு சென்ற திமுக தரப்பின் மீது சிவகங்கை மாவட்டம் புதுக்குறிச்சியில் பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்குதல் நடத்தியது அதிமுக தரப்பு. இதே வேளையில், வெள்ளிக்கிழமை மாலை வேளையில், கமுதி போலீசாரின் வழக்கமான போலீஸ் சோதனையின் போது கோட்டை மேடு அருகில் சிறிய வகை வாடகை காரில் 11 இளைஞர்கள் வந்திருந்தது தெரியவர, அவர்களை தடுத்து விசாரிக்கப்பட்டனர்.
போலீஸாரின் விசாரனையில் முன்னுக்குபின் முரணான தகவல் அளித்ததால் காரை பறிமுதல் செய்ததோடு மட்டுமில்லாமல் காரிலிருந்த 11 இளைஞர்களையும் கைது செய்தது கமுதி காவல்துறை. இன்று நடைபெற இருக்கும் கமுதி ஊராட்சிக் குழு ஒன்றிய பெருந்தலைவர் தேர்தலில் வன்முறையை தூண்ட 11பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனரா..? யார் அழைத்து வந்தது.? என்ற கோணத்தில் கமுதி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.