தமிழகம் முழுவதும் நடைபெறாமல் பலயிடங்களில் தள்ளிவைக்கப்பட்ட உள்ளாட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய குழு துணை தலைவருக்கான தேர்தல் ஜனவரி 30ந்தேதி நடைபெறும் என நீதிமன்ற உத்தரவுடிப்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஒன்றிய குழு தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. துரிஞ்சாபுரத்தில் 20 கவுன்சிலர்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 10 பேர் தேர்தல் நடைபெறவிருந்த அறைக்கு வந்துவிட்டனர். அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர், சுயேட்சை கவுன்சிலர்கள் 4 பேர், பாமக கவுன்சிலர்கள் 3 பேர் தேர்தல் நடைபெறும் இடத்துக்கு வரவில்லை. 51 சதவிதம் கவுன்சிலர்கள் வந்தால் தான் தேர்தல் நடத்த முடியும் என்ற சட்டவிதியிருப்பதால் 50 சதவித கவுன்சிலர்கள் மட்டும்மே வந்துயிருந்ததால், அதிகாரிகள் 11 மணியளவில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்தனர். அதேபோல் மதியம் 3 மணிக்கு துணை தலைவர் தேர்தல் என அறிவிக்கப்பட்டது. அதற்கும் கோரம் இல்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தாங்கள் வருகை குறித்து அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வெளியே வந்தனர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள். அதன்பின் திமுக கவுன்சிலர் மங்கலம் பிரபாகரன் செய்தியாளர்களிடம், "திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் சரியாக வந்துவிட்டோம். அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வரவில்லை. சுயேட்சை கவுன்சிலர்களை ஆளும்கட்சி என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி கடத்திக்கொண்டும் போய் வைத்துள்ளார்கள். தேர்தலில் கலந்துக்கொண்டால் எங்கே தோற்றுவிடுவோம்மோ என பயந்துக்கொண்டு பதுங்கிக்கொண்டார்கள் அதிமுகவினர். எப்போது தேர்தல் நடைபெற்றாலும் திமுகவும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள்" என்றார்.