திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், பித்தளைப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த சி.மயில்சாமி, தி.மு.க. கட்சியைச் சேர்ந்த செந்தில், முத்தையா, வீரமுத்து, பிஜேபி கட்சியைச் சேர்ந்த ஆர்.கே.சுப்பையா, சுயேட்சையாக சுருளிவேல் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கோகிலா, சுயேட்சையாக பழனியம்மாள் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
![Local body election- Candidates swear in temple](http://image.nakkheeran.in/cdn/farfuture/dzV7FY8Gb-V8_164C6SLa-Y19a1Ow1UB9hpfYENhTCs/1576837376/sites/default/files/inline-images/1_288.jpg)
மனு பரிசீலனை நாள் முடிந்தவுடன் பித்தளைப்பட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மேற்கண்ட ஆறு நபர்களும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் இரு பெண்களும் ஊரில் உள்ள முக்கிய கோவிலான காளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். ஊர் முக்கியஸ்தரான சுப.சம்பத் முன்னிலையில் பட்டறைக்காரர்களான சமுதாய தலைவர்கள் அருள்செல்வன், சதீஷ்குமார், கோவிந்தராஜ், சக்திவேல்முருகன், கோபாலகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர்களாக போட்டியிடும் அனைவரும் அம்மனை வணங்கி விட்டு, நாங்கள் பித்தளைப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் தலைவர் மற்றம் ஒன்றிய கவுன்சிலருக்கான தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணமோ, வேறு இலவச பொருட்களோ கொடுத்து வாக்குகள் சேகரிக்க மாட்டோம். ஜனநாயக முறைப்படி மக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களைச் சொல்லிதான் நாங்கள் வாக்கு கேட்போம் என சத்தியம் செய்தனர்.
ஊரார் அனைவரும் இதை போட்டோ மற்றும் வீடியோ மூலம் பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "எங்களுக்கு நலத்திட்டங்களை செய்யக்கூடிய தலைவர்களும் சிறப்பாக ஊராட்சியை முன்னேற்றக் கூடிய தலைவர்கள் தான் தேவை. எங்களுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்டுக் கேட்கும் தலைவர் தேவையில்லை" என்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் கோவில் பணிக்கு பிளாங்க் செக் (பணம் நிரப்பப்படாத காசோலை) கொடுத்ததால் கொதித்த மற்ற வேட்பாளர்கள் அம்மன் முன் சத்தியம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற அனைத்து உதவிகளையும் செய்த ஊராட்சி செயலாளர் கண்ணையாவை கிராம மக்கள் மட்டுமின்றி ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி செயலர்கள், அதிகாரிகள் பாராட்டினார்கள்.
இனி பித்தளைப்பட்டி ஊராட்சியில் ஓட்டுக்கு பணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வசூல் வேட்டை செய்யலாம், ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என கணக்கு போட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கவலையில் உள்ளனர். இதுபோல மற்ற ஊராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும், பொதுமக்களும் நடவடிக்கை எடுத்தால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது முற்றிலும் ஒழிக்கப்படும்.