தமிழகத்தில் மறுவரையறை செய்யப்படாத மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு வருகிற 27, 30ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி, ஊராட்சித் தலைவர் பதவிக்கு சுந்தரவடிவேலின் மனைவி வளர்மதி போட்டியிடுகிறார். கடந்த முறை செட்டிநாயக்கன்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்துள்ள இவர், தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில் செட்டிநாயக்கன்பட்டி சிவன்கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் வாக்காளர்களுக்கு வளர்மதி பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். இதில் 500க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த விஷயம் பறக்கும் படை தேர்தல் அதிகாரியான சண்முகத்திற்கு தெரியவர அதிகாரிகளுடன் நூற்பாலைக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது மக்கள் பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருப்பதையும், பிரியாணி வாங்க வரிசையில் நிற்பதையும் பார்த்து பிரியாணி வழங்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
இதையடுத்து, நூற்பாலை உரிமையாளர் பாஸ்கரனிடம் இது குறித்து தேர்தல் அதிகாரி கேட்டபோது, "ஓட்டுக்காக மக்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்கவில்லை. எனது மகனின் பிறந்த நாளை ஒட்டி பகுதி மக்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தோம்" என்று மலுப்பலாக பதில் கூறியுள்ளார். பின்னர் தேர்தல் காலங்களில் இதுபோன்ற பிரியாணி விருந்து நடத்தக்கூடாது என தேர்தல் அதிகாரிகள் கூறிவிட்டு சென்றுள்ளனர்.