ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதி புலிகள் காப்பகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த வனத்தில் ஏராளமான யானைகள், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில், பவானி சாகர் வனப்பகுதியிலிருந்து, பவானி சாகர் அணையில் உள்ள தண்ணீர் குடிப்பதற்காகவும் அந்த நீரில் குளியல் போட்டு மகிழவும் யானைகள் கூட்டம் கூட்டமாக அங்கு வருவது வழக்கம். அதைப்போல 27ந் தேதி இரவு பவானி சாகர் அணையின் மேல் பகுதிக்கு வந்த யானைக் கூட்டம் அருகே ஓடும் வாய்க்கால் வழியாக பவானி சாகர் அணை பூங்காவுக்குள் நுழைந்தது. பிறகு உள்ளே சென்ற யானைகள் அந்த பூங்காவிலிருந்து வெளியே வர வழி தெரியாமல் பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவின் இரும்புக் கதவுகள் மீது ஆக்ரோஷமாக மோதி அவற்றைச் சேதப்படுத்தி அதன் மூலம் வெளியே வர வழி ஏற்படுத்தி யானைகள் வெளியேறியது.
இதைக் கண்ட பூங்காவில் இருக்கும் இரவு நேர பொதுப்பணித்துறை பணியாளர்கள் அலறியடித்து வெளியே ஓடி விட்டனர். மொத்தம் நான்கு இடங்களில் சுற்றுச்சுவர்கள் மற்றும் இரும்புக் கதவுகளை உடைத்து துவம்சம் செய்தது யானைகள். பிறகு பவானி சாகர் வனத்துறைக்குத் தகவல் சென்ற பிறகு மேலும் யானைகள் பூங்காவில் நுழையாதவாறு வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.