![Loan fraud; Another case against Salem Financial Institution CEO!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Fjpi58eCFGqMM_18ik53wPoAHvPWNN9Yw5JnPuLAMNM/1651841337/sites/default/files/inline-images/fraud-in_2.jpg)
சேலத்தில், வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுத்தருவதாக கூறி, லட்சக்கணக்கில் வாரிச்சுருட்டிய நிதி நிறுவன அதிபர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சேலம் நாகியம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவருக்கு கன்னங்குறிச்சியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு என்பவர் 5 கோடி ரூபாய் வங்கிகளில் கடன் வாங்கித் தருவதாக கூறினார். மேலும், இதற்கான ஆவண செலவுகள், புரோக்கர் கமிஷனாக 5.70 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதை நம்பிய செந்தில்குமார், அவர் கேட்ட தொகையை அவரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் திருநாவுக்கரசு சொன்னபடி, கடன் பெற்றுத் தரவில்லை. இதையடுத்து திருநாவுக்கரசு தன்னை ஏமாற்றி விட்டதாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார். திருநாவுக்கரசுவின் கூட்டாளிகள் சிவா, சரவணன், வைத்தீஸ்வரன், ரங்கநாதன், மோகன்குமார் ஆகியோரும் இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
திருநாவுக்கரசு மீது அடுத்தடுத்த நாளில் இரண்டு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து தலைமறைவாக உள்ள அவரையும், அவருடைய கூட்டாளிகளையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருநாவுக்கரசு மேலும் பலரிடம் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.