Skip to main content

நாய்கள் கடித்து பாதிக்கப்பட்ட சிறுமி; இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Published on 12/08/2024 | Edited on 12/08/2024
Little girl bitten by dogs The High Court refused to give compensation

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ரகு. இவர் தனது உறவினரின் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள கடந்த மே மாதம் 5 ஆம் தேதி (05.05.2024) மாலை வெளியில் சென்றுள்ளார். அதனால் அவரது மனைவி மோனிஷா பூங்காவின் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருடன் அவரது 5 வயது மகள் சுபஷா என்பவரும் இருந்துள்ளார். இந்தச் சிறுமி பூங்காவில் அன்றைய தினம் இரவு 9 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அச்சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் இரண்டு வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு வந்துள்ளார்.

இத்தகைய சூழலில் தான் யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைப் புகழேந்தியின் 2 வளர்ப்பு நாய்களும் கடித்துக் குதறியது. இதனால் சிறுமி கதறி அழுததைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து நாயை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர். நாய்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சிறுமியின் மருத்துவச் செலவிற்கு சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் முன்பணம் வழங்கப்பட்டது.

அதேசமயம்  நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தரக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (12.08.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “தனி நபருக்குச் சொந்தமான நாய் கடித்ததற்கு அரசைப் பொறுப்பாக்க முடியாது. இதற்காக அரசிடம் நிதியுதவியைக் கோர முடியாது” எனத் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்