சமீப காலமாகவே பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோல் விலை 90 ரூபாயை தொட்டுள்ளது. பெட்ரோல் விலையுயர்வால் மக்களின் அடிப்படை அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உருவாகும் சூழலில், விலைவாசி ஏற்றம் குறித்த அச்ச உணர்வு அதுவும், இந்த கரோனா காலத்தில் மக்களிடையே மேலோங்கியுள்ளது என்றும் கூறலாம். இப்படிப்பட்ட நிலையில் அண்மையில் சமூக வலைதளங்களில், ‘20 திருக்குறள்கள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்’ என்பது போன்ற பதிவுகள் விளம்பரங்களாக வெளியாகியிருந்தது.
கரூர் மாவட்டம் வள்ளுவர் நகரைச் சேர்ந்த பெட்ரோல் பங்க்கில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் மீதும், திருக்குறள் மீதும் கொண்ட ஆர்வம் மற்றும் பற்று காரணமாக, அந்தப் பெட்ரோல் பங்கின் உரியமையாளர் செங்குட்டுவன் '20 திருக்குறள்கள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்' என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல் 10 திருக்குறள்கள் சொன்னால் அரை லிட்டர் பெட்ரோல் இலவசம் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து பலரும் அந்தப் பெட்ரோல் பங்கிற்கு சென்று திருக்குறளை ஒப்புவித்து ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க குவிந்து வருகின்றனர். சிலர் திருக்குறள் ஒப்புவிக்கும் முறை மீண்டும் பள்ளி நினைவுகளை கண் முன் கொண்டுவருதாகவும் மெய் சிலிரிக்கின்றனர்.