திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர மாநில எல்லைப்பகுதியான தேவராஜபுரம், வீரணமலை ஆகிய மலைக் கிராமங்களுக்கு வாணியம்பாடியில் இருந்து தினந்தோறும் மினி பேருந்து சென்று வருகிறது. இந்நிலையில், தமிழக - ஆந்திர மாநில எல்லையில் சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, அதனை மினி பேருந்து மூலம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் விற்கப்பட்டு வருவதால் அதனைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சுங்கச் சாவடிகள் அமைத்துக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில், வாணியம்பாடி நகர காவல்துறையினர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு வந்த தனியார் மினி பேருந்தை சோதனை மேற்கொண்ட போது, சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட சாராய பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நகரக் காவல் துறையினர் தனியார் மினிபேருந்தை பறிமுதல் செய்து மினி பேருந்து ஓட்டுநர் ஆரிமணி பெண்டா பகுதியைச் சேர்ந்த ஏமாந்திரி(24), நடத்துநர் சோபன் பாபு (42) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த 30 சாராய பொட்டலங்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.