விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பம் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் ஆறுதல் கூறியதுடன் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட டிஜிபி சைலேந்திர பாபு, “கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வறிக்கையில் இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும் ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷச் சாராயம் என்பதும் தெரியவந்தது” எனக் கூறியிருந்தார்.
தொடர்ந்து தமிழகத்தில் விஷச்சாராய உயிரிழப்பு 22 ஆக அதிகரித்தது. செங்கல்பட்டில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 8 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் செங்கல்பட்டிலும் 8 பேர் உயிரிழந்துள்ளதால் கள்ளச்சாராய உயிரிழப்புகள் 22 ஆக உயர்ந்தது. தொடர்ந்து இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முன்னதாக காவல்துறையினர் 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று, கைது செய்யப்பட்டவர்களை 3 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கைதானவர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து வெள்ளி மாலை 5 மணிக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.