2009ல் உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டும், கட்டிட வசதி இல்லாததால் 197 மாணவர்களின் கல்விநிலை பரிதாபமாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஒன்றியம், லிங்கவாடி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி 2009ம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. தலைமையாசிரியர் மற்றும் 13 ஆசிரியர்களுடன் செயல்படும் இப்பள்ளியில் 197 மாணவர்கள் படிக்கின்றனர். 2009ம் ஆண்டு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டபோது உள்ள இரண்டு வகுப்பறைகள் தான் இன்றுவரை அரசு உயர்நிலைப் பள்ளியாக செயல்படுகிறது. மரத்தடியிலும், அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்திலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துகின்றனர். மாணவர்கள் திருமண மண்டபத்தில் (சமுதாய நலக்கூடம்) உள்ள சாப்பாட்டு அறையில் தான் புத்தகங்களை வைத்து படிக்கின்றனர்.
மழை பெய்தால் திருமண மண்டபத்திலும், வெயில் அடித்தால் வராண்டாவிலும், மரத்தடியிலும் மாறி மாறி படிப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. அருகில் அரசு புறம்போக்கு நிலம் அதிகம் இருந்தும் அதை வருவாய்த்துறை அதிகாரிகள் கொடுக்க மறுப்பதாக பள்ளி மாணவர்கள் குறை கூறுகின்றனர்.
பலமுறை போராட்டங்கள் நடத்தியும் இதுநாள் வரை புதிய வகுப்பறை கட்டித்தர யாரும் முன்வராததால் மாணவர்கள் அனைவரும் திண்டுக்கல் நகரில் பிச்சையெடுத்து அதன்மூலம் வரக்கூடிய வருவாயைக் கொண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளது வேதனையான ஒன்று. மாணவர்களை கல்வி கற்க பள்ளிக்கு அழைக்கும் தமிழக அரசு அவர்களுக்கு முறையான வசதி செய்து கொடுக்காததால் அவர்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டது.