சென்னை கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில், மாநில அளவில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியருக்குப் பரிசுத் தொகைக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “திராவிட இயக்கம் என்பதே பேசிப் பேசி வளர்ந்த இயக்கம்; திராவிட இயக்கம் என்பதே எழுதி எழுதி வளர்ந்திருக்கக்கூடிய இயக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும். பகுத்தறிவுக் கருத்துகளைப் பட்டெனச் சொல்லும் நம்முடைய ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அவர் இந்த சமுதாயத்திற்காக என்னென்ன கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்பது இதன் மூலமாக நாம் அறிந்து கொண்டாக வேண்டும்.” எனப் பேசினார்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது (குறள் 647). கொண்ட கொள்கையை உறுதியோடும், உண்மையை அஞ்சாதும் எடுத்துரைத்த பெருந்தலைவர்கள் வாழ்ந்த நம் தமிழ் மண்ணில் சொல்வன்மை கொண்ட இளைஞர்கள் பெருகட்டும். நீங்கள் சொல்லும் சொல் பயனுள்ளதாக, மக்களை நன்னெறிப்படுத்துவதாக, பகுத்தறிவூட்டுவதாக அமையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.