![A leopard roaming the road; A viral video](http://image.nakkheeran.in/cdn/farfuture/macg2oUQK0uIJ9L1pm1JX0nFgZ9qT7wIYkBuKSFJr6Q/1691932141/sites/default/files/inline-images/a12_4.jpg)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, காட்டு எருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடப்பது வாடிக்கையான ஒன்றுதான். அதேபோல் திம்பம் மலைப்பாதையிலும் வன விலங்குகள் நடமாட்டம் அவ்வப்பொழுது இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.
விலங்குகள் நடமாட்டம் எச்சரிக்கை காரணமாகவே திம்பம் மலைப்பாதையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது வனத்துறை நிர்வாகம். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் திம்பம் ஆறாவது வளைவு சாலையில் சிறுத்தை ஒன்று உலாவியதை கண்டு காரை நிறுத்தினர். மேலும் மொபைல் போனில் சிறுத்தையை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.