ஈரோடு நகரை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம விலங்கு இரவில் நடமாடுவது பொதுமக்களுக்கு மரண பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு நகரிலிருந்து ஐந்து கிலோ மீட்டரில் 46 புதுார் ஊராட்சிக்கு செல்லும் வழியில் உள்ளது சஞ்சய் நகர். இதன் முதல் குறுக்கு சந்து பகுதியில் வசிக்கும் கொற்றவேல் என்பவரது வீட்டில் சிசிடிவி கேமரா உள்ளது. வீட்டுக்கு அருகே காட்டு பகுதியாக இருக்கிறது. இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம விலங்கின் நடமாட்டம் அந்த கேமராவில் பதிவாகியிருக்கிறது.
இதனை பார்த்த கொற்றவேல் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து ஈரோடு வன அலுவலர் சந்தோஷிடம் 12 ந் தேதி காலை புகார் செய்துள்ளனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வன அலுவலர்கள் ஆய்வு செய்து வன விலங்கு நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்ட பகுதியில் விலங்கின் கால் தடம், அல்லது அதன் எச்சம் ஏதேனும் தென்படுகிறதா என நேரில் ஆய்வு செய்தனர். ஆனால் முழுமையான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. அப்பகுதியில் தொடர்ந்து இரு தினங்களாக இரவு நேரத்தில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வன விலங்கு நடமாட்டம் உள்ளதா என கண்காணித்து வருகிிறார்கள்.
குடியிருப்புகள் உள்ள பகுதியில் வந்து சென்றது சிறுத்தையா அல்லது புலியா என மக்களிடம் அச்சம் எற்பட்டுள்ளது. அனேகமாக சிறுத்தையாக இருக்கலாம் என்றும் இரவில் காட்டுப் பகுதியிலிருந்து வெளியே வந்தது வாகன போக்குவரத்து காரணமாக வெகுதூரம் கடந்து இந்தப் பகுதிக்கு வந்திருக்கலாம் எனவும் இங்கிருந்து மலை பகுதிகளான சென்னிமலை, எழுமாத்தூர் மலை கரடு அல்லது அரச்சலூர் மலை பகுதிக்குள் சிறுத்தை ஊடுருவியிருக்கலாம் என வன ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். பகலில் புதரில் பதுங்கி இரவில் உணவுக்காக வேட்டைக்கு வெளியே வரும் இந்த சிறுத்தையால் ஈரோடு சுற்று வட்டார கிராமப்புற மக்கள் மரண பீதியுடன் உள்ளார்கள்.