Skip to main content

சுவர் இடிந்து விழுந்து விபத்து; 9 பேர் பலியான சோகம்!

Published on 30/04/2025 | Edited on 30/04/2025

 

Wall collapse incident Tragedy leaves 9 lost his life

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினம் சிம்மாச்சலத்தில் வராஹலட்சுமி நரசிம்ம கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மூலவர் வராக லட்சுமி நரசிம்மருக்கு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே சந்தனக் காப்பு நீக்கப்பட்டு நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளிப்பது வழக்கம். அதன்படி நிஜரூப தரிசனத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று (29.04.2025) முதல் கோயிலில் குவிந்தனர். அதன்படி நிஜரூபத்தில் இருந்த சாமிக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நித்திய பூஜைகளும் நடந்து மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து சாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருந்தனர்.

இதற்கிடையே நேற்று நள்ளிரவு முதல் சிம்மாச்சலத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாகப் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்குச் செல்லும் வழியில் வந்து உள்ள வணிக வாளகத்தில் 300 ரூபாய்க்கான சிறப்பு நுழைவு தரிசன வரிசை அமைக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு ஏராளமான பக்தர்கள் இருந்தனர். அதே சமயம் அங்கிருந்த சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த சுவரின் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இந்த இடிபாடுகளில் சிக்கியிருந்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் போலீசாரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அம்மாநில உள்துறை அமைச்சர் வங்களுடி அனிதா மற்றும் மாவட்ட ஆட்சியர் அரிந்திர பிரசாத் ஆகியோர் தலைமையில் மீட்புப் பணிகள் நடைபெற்றது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வர் பவன் கல்யாணும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அறநிலையத்துறையின் முதன்மை செயலாளர் வினய் சான் கூறுகையில், “இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது வரை ​​சுமார் 8 பேர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. முதற்கட்ட தகவல்படி அதிகாலை 02.30 மணி முதல் 03.30 மணி வரை மழை பெய்ததது. எனவே சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து உடனே முடிவுக்கு வருவது பொருத்தமானதல்ல” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்