கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கனகராஜ் தலைமையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதிகைலாஷ் பகுதிக்கு 17 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் ஆன்மீக சுற்றுலா சென்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வந்தனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ள கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த பராசக்தி என்ற பெண்ணிடம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொலைப்பேசியில் பேசி அனைவருக்கும் ஆறுதல் கூறினார். மேலும் அங்கிருந்து மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் யாரும் பயப்படவேண்டாம் என்று கூறி சென்னை வந்ததும் சொந்த ஊருக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதுகுறித்து கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளனர். தமிழர்கள் 30 பேருக்கும் தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், ‘நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தமிழர்களை மீட்க உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக ஒரு முறைக்கு 5 பேர் வீதம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை விரைவில் சென்னைக்கு அனுப்பிவைக்கவும் பின்னர் அவர்களின் சொந்த ஊருக்குச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதே சமயம் போர்க்கால நடவடிக்கைகள் மூலம் 30 பேரையும் மீட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் கண்ணீர் மல்க நிலச்சரிவில் சிக்கியவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.