திருச்சி மாவட்டம் லால்குடி செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் சிறைக்காவலர் ராஜா (வயது 40). கடந்த 2020 ஆம் ஆண்டு ராஜாவிற்கும் அவரது சகோதரர்களுக்கும் சொத்து தகராறு எழுந்துள்ளது. இதில் ராஜாவின் மகனை அவரது சகோதரர்கள் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அன்று முதல் மன உளைச்சலில் இருந்த அவர் சரியாகப் பணிக்குச் செல்லாமல், பணியில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் சிறைக்காவலர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சொத்து தகராறு காரணமாக தன்னுடைய மகனை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி லால்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இவர் புகார் கொடுத்த அன்று உதவி ஆய்வாளர் பொற்செழியன் என்பவர் பணியில் இருந்த நிலையில், விசாரணை நடத்தப்பட்டதில் ராஜாவின் மீது தவறு இருந்ததால் பொற்செழியன் அவரை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவமானம் தாங்க முடியாமல் ராஜா காவல் நிலையம் முன்பு நேற்று தீக்குளித்தார்.
இதையடுத்து அவரை மீட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, லால்குடி உதவி ஆய்வாளர் பொற்செழியனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார்.