Skip to main content

முக்கிய பிரமுகரை கொல்ல சதித்திட்டம்; சுற்றிவளைத்த போலீஸ் - சிக்கிய குமுளி ராஜ்குமார்

Published on 18/10/2024 | Edited on 18/10/2024
Kumuli Rajkumar arrested

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் போலீசார், கடந்த 15 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில்.. வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்த முற்பட்ட போது காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்ட் மீது மோதி காரை நிறுத்தியுள்ளனர்.

போலீசார் அந்த காரின் அருகில் சென்றபோது, அதிலிருந்து வீச்சருவாளுடன் இறங்கிய ஒரு நபர் தன்னுடைய பெயர் குமுளி ராஜ்குமார் என்றும் தான் பெரிய ரவுடி என்றும், தன்னை கைது செய்யக்கூடாது எனவும் கூறி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது. அத்துடன் அவர் அங்கிருந்து தப்பியும் சென்றுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவர் பரமக்குடி பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் பரமக்குடி சென்று, அங்கிருந்த குமுளி ராஜ்குமார்(45) மற்றும் அவருடன் காரில் பயணித்த பாலு என்கிற பாலசுப்ரமணியன்(45) ஆகியோரை கைது செய்தனர். காரில் பயணித்த மேலும் 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அவர்களை அவர்கள் காருடன் திருச்சிக்கு அழைத்து வந்தனர். பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் காரை சோதனை செய்தபோது காரில் இரண்டு நாட்டு துப்பாக்கிகள், இரண்டு வீச்சருவாள், 25 சனல் வெடிகள் ஆகியவை இருந்துள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் குமுளி ராஜ்குமார் என்பவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது உள்ளதும், சரித்திர பதிவேடு குற்றவாளியான அவர், தேவேந்திர குல மக்கள் இயக்கம் என்கிற அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகவும் செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது. தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்த குமுளி ராஜ்குமார், 7 கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் எனத் தனிப்படை போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது ஆயுதங்கள் வைத்திருந்தால் உள்ளிட்ட வழக்குகளைப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலு என்கிற பாலசுப்பிரமணியத்தையும் கைது செய்து ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரைப் பற்றி போலீஸ் தரப்பில் கூறும் போது, நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராஜ்குமார். தனது 16ஆவது வயதில் டீக்கடைக்காரர் ஒருவரின் மண்டையை உடைத்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

அதன் பின்னர் நெல்லையில் இருந்து தப்பி, தேனி மாவட்டம் குமுளிக்குச் சென்றார். அங்கு நண்பர்களுக்காக அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். கடந்த 1999 ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 19. பின்னர் 2010-ல் ராஜ்குமார் தேவேந்திரகுல மக்கள் இயக்கம் என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி அதற்கு தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். பின்னர், ஆங்காங்கே ஆதரவாளர்களை சேர்த்துக்கொண்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் தான் இவர் முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்யத் திட்டமிட்டு இருப்பது உளவுத்துறைக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை போலீசார் தேடி வந்தநிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்கின்றனர்.

சார்ந்த செய்திகள்