நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் திருவாரூர் நகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் மாதக்கணக்கில் பராமரிக்காததால், ஒவ்வொரு இடத்திலும் சாக்கடை நீர் நிரம்பி வீதியில் ஓடுகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் மழை காலம் துவங்கி விட்டதால், இன்னும் மோசமாகிவிட்டதாக கூறி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், திருவாரூர் நகர பகுதிகளில் தினசரி குப்பை அள்ளப்படாததை கண்டித்தும், புதிய பேருந்து நிலைய சாலை உள்ளிட்ட திருவாரூர் நகர் முழுவதும் சாலைகள் மோசமாக உள்ளதை சீர் செய்ய வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகம் எதிரே மனிதநேய மக்கள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் பங்கேற்று நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.