கடந்த 4-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி வந்திருந்தபோது, அவரைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார் உசிலம்பட்டியைச் சேர்ந்த அன்பழகன். நிர்மலாதேவியின் ரசிகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், உசிலம்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் நகரச் செயலாளராக இருக்கிறேன் என்று உரத்துச் சொன்னார். அதை நாம் அவருடைய படத்தையும் போட்டு செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
இந்தச் செய்தியைப் படித்த நாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் அ.ராஜா நம்மைத் தொடர்புகொண்டு “அந்த அன்பழகன் ஒருமாதிரியான ஆள். திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக உசிலம்பட்டி வந்திருந்த தலைவர் சீமானுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். மற்றபடி, அவருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எப்படியாவது விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு திரியும் அன்பழகன், டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுடனும் போட்டோ எடுத்திருக்கிறார். இன்னும் சில பிரபலமான பெண்களுடனும் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். நிர்மலாதேவியோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்போடுதான் அன்று அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார்.” என்றார்.
நாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி நகரச் செயலாளர் என்று அன்பழகன் நம்மிடம் சொன்னபோது, மீடியா நண்பர்கள் பலரும் உடன் இருந்தனர். அந்த அன்பழகன் இப்போது ஏனோ ‘நான் அப்படிச் சொல்லவில்லை’ என்று நாம் தமிழர் கட்சியினரிடம் மறுத்துப் பேசியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராகக்கூட இல்லாத அன்பழகன், நகரச் செயலாளர் என்று பீலா விட்டிருக்கிறார்.
நிர்மலாதேவி ரசிகன் என்று கூறிக்கொள்ளும் அன்பழகன் இனியாவது கண்டபடி உளறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.