Skip to main content

குமரி அனந்தன் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 09/04/2025 | Edited on 09/04/2025
 Kumari Ananthan passes away; political leaders mourn

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான குமரி அனந்தன் (93) காலமானார். குமரி அனந்தன் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்த்குமாரின் சகோதரும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும் ஆவார். சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனிற்றி நள்ளிரவு 12:30 மணிக்கு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த நான்காம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். குமரி அனந்தன் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை நாடாளுமன்ற எம்பி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணி அளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 Kumari Ananthan passes away; political leaders mourn

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் 'தகைசால் தமிழர் விருது வழங்கிய போது வாஞ்சையோடு உறவாடிய குமரி அனந்தன் நினைவு கண்ணீரை பெருக்குகிறது. ஏராளமான நூல்களையும் மேடைகளையும் கண்ட குமரி அனந்தன் அவரது தமிழால் நம் நெஞ்சங்கள் என்றும் நிறைந்து இருப்பார்' என தெரிவித்துள்ளார்.

 Kumari Ananthan passes away; political leaders mourn

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான திரு. குமரி அனந்தன் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். பாசமிகு தந்தையாரை இழந்து சொல்லொண்ணா துயரில் வாடும் அன்புச் சகோதரி தமிழிசை அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த குமரி அனந்தன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்' என தெரிவித்துள்ளார்.

 Kumari Ananthan passes away; political leaders mourn

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக காங்கிரசின் மூத்த தலைவரும், பெருந்தலைவர் காமராசரின் சீடருமான இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன் உடல்நலக்குறைவால் காலமானர் என்பதையறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தேசப்பற்று மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவரான குமரி அனந்தன், இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். காமராசர் காலத்தில் இளைஞர் காங்கிரசின் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து கட்சியை வளர்த்தார். காமராசரின் அன்பைப் பெற்று அவரது சீடராக மாறிய குமரி அனந்தன், காமராசரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் 1977&ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

என் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டிருந்தவர். தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பது தான் அவரது உயர்ந்த நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அதை பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்று உறுதியாக நம்பினார். அண்மையில் கூட, உடல் நலிவடைந்த நிலையிலும் என்னுடன் தொலைபேசியில் பேசிய குமரி அனந்தன், தமிழ்நாட்டில் எப்படியாவது மதுவை  ஒழித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவரது மறைவு மது ஒழிப்பு முயற்சிக்கு பேரிழப்பாகும்.

குமரி அனந்தனை இழந்து வாடும் அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

 Kumari Ananthan passes away; political leaders mourn

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்; தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர்.

எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா திரு. குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்' என தெரிவித்துள்ளார்.

அதேபோல் இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. குமரி ஆனந்தன் மறைவுக்கு பேரவையில் சபாநாயகர் அப்பா இரங்கல் குறிப்பு வாசித்து அவரை இழந்து வாடும்  குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்