Skip to main content

எனக்கு கொல்லிப்போட இருந்த ஒரே மகனை கொன்னுடாங்க... ஆளுநரிடம் கதறி அழுத மூதாட்டி!

Published on 29/05/2018 | Edited on 29/05/2018
govrn

 

 


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் கூறி வருகிறார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து, இன்று துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் கூறி வருகிறார்.
 

 

அந்த வகையில், போலீசாரின் கொலைவெறி தாக்குதலில் உயிரிழந்த செல்வசேகர் (40) என்பவரது இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் ஆளுநர் ஆறுதல் தெரிவித்தார். அப்போது, செல்வசேகர் வீட்டில் இருந்த அவரது தாயார் கதறி அழுதவாறு ஆளுநரிடம் கூறியதாவது,

என்னுடைய மகன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அவன் உண்டு, வேலை உண்டு என்று இருப்பான். என்னுடைய கணவர் இறந்த பிறகு, அவனது வருமானத்தில்தான் எங்களது குடும்பம் நடந்து வந்தது. கடந்த 22–ந் தேதி வேலைக்கு சென்றான். ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இன்று விடுமுறை வீட்டுக்கு செல்லுங்கள் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதையடுத்து என்னுடைய மகன் ஊருக்கு வருவதற்காக 3–வது மைல் பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளான். அங்கு வந்த போலீசார் என்னுடைய மகனை சரமாரியாக லத்தியால் தாக்கி வயிற்றிலும், மார்பிலும் மிதித்துள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அவன், ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்து விட்டான். எனக்கு கொல்லிப்போட இருந்த ஒரே மகனை கொன்னுடாங்க. அப்பாவியான என்னுடைய ஒரே மகனை இழந்து விட்டேன். இனி பிழைப்புக்கு நாங்கள் என்ன செய்ய போகிறோம் என ஆளுநரிடம் கதறி அழுதார்.

 

சார்ந்த செய்திகள்