Skip to main content

கொடைக்கானலில் போதை விருந்து- இளம்பெண்கள் உட்பட 270 பேர் கைது

Published on 07/02/2020 | Edited on 07/02/2020
k

 

கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வருகின்றனர். இவர்களை குறி வைத்து கஞ்சா, போதை காளான் உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை காளான் சாப்பிட்டு கேரள மாணவர்கள் மயங்கினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால் போதை காளான் விற்பனை குறைந்தது.

இளைய சமுதாயத்தினரிடம் நாகரீகம் என்ற பெயரில் மது விருந்தில் பங்கேற்பது அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சி பகுதியில் தனியார் தோட்டத்தில் மது விருந்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.  இளம் வயது வாலிபர்களை குறி வைத்து இவ்வாறு மது விருந்துக்கு ஒருங்கிணைப்பது அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் மாணவர்கள், வாலிபர்கள் ஒன்றிணைக்கப்படுகின்றனர். அவர்கள் மலை ஸ்தலங்களில் விடுதிகளில் மது கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொடைக்கானல் மேல் மலை கிராமமான கூக்கால் குண்டுப்பட்டியில் மது விருந்து நடப்பதாக தென் மண்டல ஐ.ஜி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி போலீசார் விரைந்து வந்து பார்த்த போது இளம்பெண்கள் உட்பட270 பேர்  மது விருந்தில் கலந்து கொண்டது தெரிய வந்தது.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்து ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டு கொடைக்கானலில் மது விருந்து கொண்டாட முடிவு செய்துள்ளனர். மேலும் சிலரிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் விருந்துக்கு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்