விருதுநகர் வடக்கு மாவட்ட திமுகவுக்கு ஒன்றிய, நகர, பேரூர், ஊர்க்கிளை, நகர வார்டு, பேரூர் வார்டு அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமனம் செய்து, இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முரசொலியில் அறிவிப்பு வெளியிட்டிருந்ததைப் பார்த்து, விருதுநகர் திமுக ஒன்றியச் செயலாளரும், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.ஆர்.சீனிவாசனும், விருதுநகர் நகரச் செயலாளர் தனபாலனும் அதிர்ந்து போனார்கள். காரணம் – அவர்கள் பரிந்துரைத்தவர்களில் ஒருவர்கூட அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
இந்நிலையில், எம்.எல்.ஏ. சீனிவாசனைத் தொடர்புகொண்டு, ‘இளைஞரணியின் புதிய நிர்வாகிகளை வாழ்த்துவதற்கு நீங்கள் அவசியம் வரவேண்டும்’ என்றழைத்திருக்கிறார், விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார். கோபத்தில் அவரைத் திட்டிவிட்டு, ‘வரமுடியாது’ என்று மறுத்திருக்கிறார் எம்.எல்.ஏ. சீனிவாசன்.
இதனைத் தொடர்ந்து, விருதுநகரில் வசிக்கும் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆரை சந்தித்து முறையிட்டார் சீனிவாசன். “இப்ப போட்டிருக்கிற எல்லாமே புது ஆளுங்க. நாங்க பரிந்துரைத்த ஒருத்தர்கூட லிஸ்ட்ல இல்ல. எல்லாருமே கிருஷ்ணகுமாருக்கு வேண்டப்பட்டவங்க. இதுல இளைஞரணி முக்கியப் பொறுப்புக்கு வந்திருக்கிற ஒருத்தரோட மனைவி கொஞ்ச நாளைக்கு முன்னால தற்கொலை பண்ணிட்டாங்க. போலீஸ் கேஸாயிருச்சு. இப்படியிருந்தா எப்படி? எங்களை மாதிரி உள்ளவர்களை தங்கம் தென்னரசு ஒதுக்குற மாதிரி தெரியுது” என்று புலம்பியிருக்கிறார்.
இதுகுறித்து, வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசுவிடம் பேசிய கே.கே.எஸ்.எஸ்.ஆர். “என்னப்பா எம்.எல்.ஏ. சொன்னதுல ஒன்னுகூட வரல. இப்படி போட்டா கட்சி வேலை எப்படி நடக்கும்? அவர் சொன்னார்ன்னு வந்தவர் போனவர்க்கெல்லாம் பொறுப்பு கிடைச்சிருக்கு. இதெல்லாம் முறையா?” என்று கேட்டிருக்கிறார். உடனே தங்கம் தென்னரசு “எம்.எல்.ஏ.வும் நகரச் செயலாளரும் கொடுத்த லிஸ்ட்டை சேர்த்துட்டேன்னு சொன்னாரு கிருஷ்ணகுமார். அவரு பேச்சை நம்பித்தான் கையெழுத்துப் போட்டேன். இப்ப அறிவிப்பும் வந்திருச்சு” என்று நடந்ததை விவரித்திருக்கிறார். அதற்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர் “நான் எவ்வளவு அரசியல் பண்ணிருக்கேன். என் படத்தையோ, பெயரையோ போடாம மூணு வருஷமா இந்த விருதுநகர்ல அவர் அரசியல் பண்ணுறார். நீங்களும் அவர் சொன்னார்னு போட்டுட்டீங்க. என்ன பண்ணுவீங்களோ, தெரியாது. எம்.எல்.ஏ. சொன்ன ஆளுங்க.. நகரச் செயலாளர் சொன்ன ஆளுங்க பேரு, அடுத்த அறிவிப்புல வரணும். அதுக்கு நீங்கதான் பொறுப்பு.” என்று வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாம் விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமாரிடம் பேசினோம். “எம்.எல்.ஏ.கிட்டயும் நகரச் செயலாளர்கிட்டயும் கலந்து பேசித்தான் லிஸ்ட்டே கொடுத்தேன். ஜம்புகுமார் மனைவி தற்கொலை செய்துகொண்டது உண்மைதான். அவர் மீது எந்த வழக்கும் இல்லை” என்றவரிடம் ‘அப்படியென்றால்.. இந்த விவகாரம் தலைமை வரை ஏன் புகாராகப் போயிருக்கிறது?’ என்று கேட்டோம். “பிறகு பேசுகிறேன்..” என்று லைனைத் துண்டித்தார்.
இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் கே.கே.எஸ்.எஸ்.ஆர். “கிருஷ்ணகுமார்கூட நான் பேசுறதே இல்ல. தப்பான ஆளு. அவரைப்பத்தி விவரமா நக்கீரன்லகூட வந்திருக்கு” என்று 09-12-2020 நக்கீரன் இதழில் வெளிவந்த கட்டுரையைக் காட்டியிருக்கிறார். ‘இளைஞரணி நியமனத்தில் குளறுபடிகளாமே?’ விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், திருச்சுழி எம்.எல்.ஏ.வுமான, தங்கம் தென்னரசுவிடம் கேட்டோம். “கட்சிக்குள் நடைபெறும் நியமனங்கள் குறித்து மாவட்டச் செயலாளர் என்ற முறையில் நான் கருத்துத் தெரிவிப்பது பொருத்தமாக இருக்காது. கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவர்கள் என்னிடம் எது பற்றியும் வருத்தப்பட்டுப் பேசியதில்லை.” என்றார்.
விருதுநகர் இளைஞரணிக்கு தகுதியான நிர்வாகிகளை நியமித்து புதிய பட்டியல் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர், உள்ளூர் திமுகவினர்.