கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பேருந்து கூண்டு கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். அதன்படி இன்று (14.11.2024) மாலை வழக்கம் போல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வகையில் பணியாளர் புதிதாகக் கூண்டு கட்டப்பட்ட புதிய பேருந்துக்கு இறுதிக்கட்ட பணிகள் மேற்கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக தீடிரென பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அங்கு இருந்தவர்கள் பேருந்தை விட்டு வெளியேறி விட்டனர். இருப்பினும் பணியில் இருந்த ரவி என்ற பணியாளர் ஒருவர் பேருந்தில் இருந்து வெளியேற முயன்றுள்ளனர். அச்சமயத்தில் கதவு பூட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்தினுள் சிக்கி அந்த பணியாளர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையின் தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து காரணமாக அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த தீ விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து பொதுமக்களை காவல்துறை வெளியேற்றியுள்ளனர். பேருந்தில் கூண்டு கட்டும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.