அண்மையில், கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைதுசெய்யப்பட்ட நிலையில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் போராட்டத்தின் காரணமாக அந்தப் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார். இந்த தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கரூரில் ஒரு மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளியில் படித்துவந்த 12ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று (19.11.2021) பள்ளி சென்று மாலை வீடு திரும்பிய நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை தொடர்பாக வெங்கமேடு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். கோவை சம்பவத்தைப் போலவே இந்த மாணவியும் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகத் தற்கொலை செய்துகொண்ட மாணவி எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் 'பாலியல் தொல்லையால் உயிரிழந்த கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும். யார் இந்த முடிவ எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
கோவை மாணவி தற்கொலை சம்பவத்தின் ஈரம் காயும் முன்னே மீண்டும் இப்படியொரு சம்பவம் கரூரில் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.