வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிகழ்ச்சிக்கு இந்தியாவின் முன்னாள் மட்டைப்பந்து (கிரிக்கெட் டீம்) ஆட்ட தலைவரான கபில்தேவ் வருகை தந்திருந்தார். அங்கு பள்ளி மாணவ – மாணவிகள் மத்தியில் பேசும்போது, கழிவறை இல்லை என்பதற்காக தனது தந்தை மீதே காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார் இந்த ஊரைச்சேர்ந்த ஜாரா என்கிற மாணவி. இந்த மனநிலை அனைத்து பிள்ளைகளிடமும் இருக்க வேண்டும்.
இந்த மாணவியைப் போன்றவர்தான் என் மகள். நான் என் மகளுடன் இரவு நேரத்தில் காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தேன். அப்போது சிக்னலை கவனிக்காமல் வந்த நான், திடீரென சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததும் உடனே காரை நிறுத்திவிட்டேன், எங்களை நோக்கி வந்த ட்ராபிக் வார்டன், காரின் கண்ணாடியை தட்டினார், திறந்ததும் என்னைப்பார்த்ததும், நீங்களா சார் என சொல்லி சிரித்துவிட்டு நீங்க போங்க சார் என்றார்.
உடனே அருகில் இருந்த என் மகள், அப்பா நீங்கள் செய்தது தவறு, அதனால் விதியை மீறியதற்கு உடனே அபராதம் கட்டுங்கள் என கோபமாக கூறினாள். ட்ராபிக் வார்டன் வேண்டாம் தெரியாமல் செய்த தவறுதானே எனச்சொல்லியும், என் மகள் நீங்கள் கட்டவில்லையென்றால் அவ்வளவு தான் என்றாள் நான் அபராதம் கட்டிவிட்டே சென்றேன்.
நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் அதில் திறமையை வளர்த்துக்கொண்டு நிபுணத்துவம் பெற வேண்டும், இந்தியாவை எல்லா துறைகளிலும் வளர்க்க, நம் நாடு தன்னிகரற்ற நாடாக விளங்க மாணவர்கள் சிறப்பாக படித்து தங்களது பங்களிப்பை நாட்டுக்கு தர வேண்டும். அதோடு, நமக்கு நல்லது செய்யும் அரசியல்வாதிக்கு நமது வாக்குகளை செலுத்தி வெற்றி பெறவைக்க வேண்டும் அப்போது தான் அவர் நமக்கு நல்லது செய்வார் என்றார்.