![Kanyakumari Roads are getting ready to CM visit](http://image.nakkheeran.in/cdn/farfuture/g3UqnucQtzxmZQI3uLq4reo2s_pcermGwDOyq1MkNDM/1600338413/sites/default/files/inline-images/kanyakumari-in_0.jpg)
குமரி மாவட்டத்தில் நாகா்கோவில் மாநகராட்சி ரோடுகளும் அதேபோல் தேசிய நெடுஞ்சாலை ரோடுகளும் குண்டும் குழியுமாகதான் இணைந்திருக்கும். இதைத்தான் கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தோடு பயன்படுத்தி வருகிறார்கள்.
நாகா்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட ரோடுகள் கடந்த 7 ஆண்டுகளாகச் சரிசெயப்படாமல் குண்டும் குழியுமாகக் காணப்பட்டு வருகின்றன. இதனால் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் சாலையைச் சீரமைக்க கேட்டு, பல கட்டங்களாக மக்கள் போராடி வந்தனர்.
இதேபோல் தி.மு.க, எம்.எல்.ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் மற்றும் தி.மு.கவினரும் போராட்டங்கள் நடத்திவந்தனா். அதேபோல் தேசிய நெடுஞ்சாலையான கன்னியாகுமரி டூ களியக்காவிளை சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதைச் சரிசெய்ய கேட்டு தி.மு.க, எம்.எல்.ஏ, மனோ தங்கராஜ் 16 கிமீ தூரம் நடந்தே வந்து கலெக்டா் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார். மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி மற்றும் காங்கிரசார் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆளை விழுங்கும் குண்டுகளை நிரப்ப வலியுறுத்தி, சாலை மறியல் நடத்தினார்கள்.ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் அரசோ அதிகாரிகளோ எடுக்கவில்லை.
![Kanyakumari Roads are getting ready to CM visit](http://image.nakkheeran.in/cdn/farfuture/oii8ys3TRN2qwjag5TUD-CUNuXubtA8s3Np6XTS9Brc/1600338441/sites/default/files/inline-images/kanyakumari-in-1.jpg)
இந்த நிலையில் 22-ஆம் தேதி முதல்வா் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டத்திற்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வருகிறார். இதையடுத்து குண்டும் குழியுமான சாலைகளைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். நாகா்கோவிலில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து தூத்துக்குடிவந்து அங்கிருந்து கார் மூலம் நாகா்கோவில் வருகிறாரா? அல்லது அங்கிருந்து கன்னியாகுமரி வந்து தங்கிவிட்டு நாகா்கோவில் வருகிறாரா? அல்லது திருவனந்தபுரம் வந்து நாகா்கோவிலுக்கு வருகிறாரா? என்று முதல்வரின் பயணத் திட்டம் முடிவு செய்யப்படாததால், அவா் எந்த வழியாக வந்தாலும் சாலைகள் குண்டும் குழியுமாக இல்லாமல் பளீச் என்று இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மூன்று வழிகளான தேசிய நெடுஞ்சாலைகளைச் செப்பனியிடும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.
![Ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/24IIj_WWURXA9FUDRz1Ui6oztOGg8IfO7fdyY44u2y8/1598702903/sites/default/files/inline-images/01_19.png)
அதேபோல் திரும்பிய பக்கமெல்லாம் குண்டும் குழியுமாகக் கிடந்த நாகா்கோவில் மாநகராட்சி ரோடுகளும் பளீச் ஆகி வருகிறது. கலெக்டா் அலுவலக சாலைகள், வடசேரி சாலைகள் வண்ணமயமாக பச்சைப் பசேலென காட்சியளிக்கிறது. பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் எத்தனையோ போராட்டங்கள் நடத்தி கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள், முதல்வா் வருகையால் இரவு பகலாக சாலைகளைச் சீரமைக்க பாடுபடுவதை வேடிக்கையாகப் பேசி வருகின்றனா் அப்பகுதி மக்கள்.