கன்னியாகுமரியில் இருந்து இந்தியா ஒற்றுமை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, 4ம் நாளான இன்று (10-ம் தேதி) காலை 7 மணிக்கு முளகுமூட்டில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். சாலையின் இரு பக்கங்களும் மக்கள் நின்று ராகுல் காந்திக்கு கை காட்டி உற்சாகப்படுத்தினர். இதில் மருதூர்குறிச்சியில் 60 வயதான ஜெலஸ்டின் 2 நிமிடம் சிலம்பாட்டம் ஆடி ராகுல் காந்தியை மகிழ வைத்ததுடன் அவருடன் ஒரு கி.மீ தூரம் நடந்தார்.
சாமியார்மடத்தில் நடந்து செல்லும் போது ரோட்டில் தன்னை பார்க்க நின்ற சிறுமியை அழைத்து அவளின் தோளில் கை போட்டு கொஞ்சம் தூரம் நடந்து சென்றார். பெண் ஒருவா் ராகுல் அய்யா என சத்தம் போட்டு கூப்பிட, அந்த பெண்ணை அழைத்து அவரின் கை பிடித்து நடந்தார். அந்த பெண்ணும் கையை உயர்த்தி கோஷங்கள் எழுப்பியவாறு ராகுல் காந்தியுடன் நடந்து சென்றார்.
இரவிபுதூா் கடையில் நடந்து செல்லும் போது ஐந்தாறு சிறுமிகள் ஒன்றாக நின்று ராகுல் சார்... ராகுல் சார்னு கூப்பிட்டார்கள் உடனே அவர்களை அருகில் அழைத்து அவா்களுடன் செல்ஃபி எடுத்தார். பின்னர் இரண்டு இளம் பெண்கள் ராகுல் காந்தியுடன் பேச வேண்டும் என சொல்லி பாதுகாவலா்களிடம் கேட்டு கொண்டே பின்னால் சென்று கொண்டிருந்தனர். சுமார் அரை கி.மீ தூரம் சென்றதும் யதார்த்தமாக பின்னால் பார்த்த ராகுல் காந்தி அந்த இளம் பெண்களை அருகில் அழைத்து அவா்களிடம் பேசிய படியே நடந்து சென்றார்.
அதே போல் விளையாட்டு வீராங்கனைகளை அருகில் அழைத்து பேசினார் மேலும் சாலை ஒரத்தில் நின்று கொண்டிருந்த தூய்மை பணியாளா்களின் அருகில் சென்று அவா்களின் கையை பிடித்து புகைப்படம் எடுத்து கொண்டார் ராகுல் காந்தி. இப்படி 4ம் நாள் நடைபயணத்தில் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக நெருக்கமாகவே செல்கிறார். மக்களும் ராகுல் காந்தியை உற்சாகமாக வரவேற்கிறார்கள்.