![50,000 glow sticks have been provided for safety of Lord Muruga devotees](http://image.nakkheeran.in/cdn/farfuture/GrzvDpFkG4nbFyPbe93AhecFsnSB9evOczN3JJSItY4/1738998375/sites/default/files/inline-images/51_112.jpg)
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகனுக்கு வருடந்தோறும் தைப்பூச திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த வருடம் தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் காரைக்குடி, தேவகோட்டை, மேலூர், மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, கம்பம், போடி, தேனி, பெரியகுளம், திருச்சி, ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக தைப்பூசத்திற்கு பழனிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
இப்படி வரக்கூடிய பக்தர்கள் ரோட்டின் ஓரங்களில் முருக பக்தர்களுக்காக போடப்பட்ட நடைபாதைகளிலும், ரோடுகளிலும் ரோட்டு ஓரங்களிலும் நடந்து செல்கிறார்கள். ஆனால் தற்போது திண்டுக்கல்ல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை உள்ள நடைபாதைகளில் ரோடு சீரமைக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் நடந்து செல்வது கஷ்டமாக இருக்கிறது. அதோடு ரோட்டு ஓரங்களில் வண்டி வாகனங்களுக்கிடையே உயிரை கையில் பிடித்துக் கொண்டு ரோட்டு ஓரங்களில் நடந்தும் செல்கிறார்கள். இப்படி செல்லக்கூடிய பக்தர்களுக்கு போலீசார் வருடந்தோறும் ஒளிரும் குச்சிகளும் ஸ்டிக்கர்களும் வழங்கி வருவது வழக்கம்.
இது சம்பந்தமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் கேட்டபோது, “வருடந்தோறும் தைப்பூசத்திற்காக பாதயாத்திரை வரும் முருக பக்தர்கள் இரவிலும் நடந்து செல்கிறார்கள். இப்படி செல்லக்கூடிய முருக பக்தர்களின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒளிரூட்டும் குச்சியும் கொடுத்து அவர்கள் கொண்டுவரும் பேக் மற்றும் கைப் பைகளில் ஸ்டிக்கரும் ஒட்டி வருகிறோம். அதுபோல் இந்த வருடம் மாவட்டத்தின் எல்லைகளான வையம்பட்டி, வேடசந்தூர், கொடைரோடு, கொடைக்கானல் பிரிவு, பழனி பைபாஸ் உள்பட ஐந்து இடங்கள் வழியாக நடந்து வரும் முருக பக்தர்களுக்காக ஐம்பதாயிரம் ஒளிரும் குச்சிகள் பாதுகாப்புக்காக இதுவரை கொடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல் அவர்கள் கொண்டு வரும் பொருட்கள் மீது ஸ்டிக்கரும் ஒட்டி வருவதால் முருக பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பாதுகாப்பாக நடந்து சென்று முருகனை தரிசித்து விட்டு ஒரு மனத் திருப்தியுடன் செல்கிறார்கள்” என்று கூறினார்.