மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்நாள் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து விளக்கப்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன், "தேர்தலை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கான அனைத்து வழிமுறைகளும் ஆராயப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 24 மணி நேரத்தில் முடிவடைந்து விடும். இதேபோல் அரசு விடுதிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மூன்று குழுக்கள் என மொத்தம் 27 குழுக்கள் பறக்கும் படை மற்றும் வீடியோ கண்காணிப்பு கேமராக்கள் உடன் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் 24 மணி நேரமும் தேர்தல் விதிமீறல்களை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். மேலும் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ள சி-விஜில் என்ற செயலி மூலம் தேர்தல் விதி மீறல்கள் இருந்தால் அதிகாரிகளுடன் சேர்ந்து பொது மக்களும் அதனை கண்காணித்து உடனுக்குடன் புகைப்படமாகவோ வீடியோவாக அனுப்பினால் அதன் பெயரில் 100 நிமிடங்களில் தீர்வு காணப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கப்பட்டு உள்ளதாகவும், 1950 என்ற தொலைபேசி எண்ணில் பயன்படுத்தி புகார் அளிக்கலாம்" என தெரிவித்தார்.
மேலும் " கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,300 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 163 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனவும் தெரிவித்தார்.