உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்துவது சந்தேகம் தருகிறது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு தொடுப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது.வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும். அதேசமயம் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக தொடுத்த வழக்கு மீதான அவசர விசாரணை வரும் 5-ஆம் தேதி நடக்க உள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரியில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
" தேர்தல் முறையாக நடைபெற வேண்டுமென்ற நோக்கில் தான் திமுக, நீதிமன்றம் சென்றது. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக மேற்கொள்ளும். அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தல் மூலம் முறைகேடு செய்ய முயற்சித்து வருகிறது.தமிழகத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்படும் நிலையில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுவது வேடிக்கையாக உள்ளது. நாடு முழுக்க உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு இருக்கிறது. அங்கெல்லாம் நகராட்சி அமைப்புகளுக்கு தனியாக தேர்தல் நடத்தப்படவில்லை.
ஆனால் தமிழகத்தில் புதிதாக, தனியாக நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துகிறார்கள். நிர்வாக காரணம் என்று தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது. அ.தி.மு.கவுடன் மாநில தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு தலைவரே முதல்வர் பழனிசாமி தான் என்று நினைக்கிறேன். அவரின் சொல்படிதான் எல்லாம் நடக்கிறது. தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற இப்படி செய்கிறார்கள். வார்டு மறுவரையரை செய்யும் வரை தேர்தலை நடத்த அனுமதிக்க மாட்டோம். இதற்கு எதிராக இரண்டு வழக்குகள் இருக்கிறது. ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்னொரு வழக்கு 5-ஆம் தேதி அவசரமாக விசாரிக்கப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த நீதிமன்றத்தை அணுகுவோம். இது தொடர்பாக இன்று மாலை சட்ட வல்லுநர்களை சந்தித்து ஆலோசனை செய்ய இருக்கிறோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.