இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கப்பல் ஒன்றை ஈரான் நாடு கடந்த வாரம் சிறை பிடித்தது. இதில் ஒரு தமிழர் உட்பட 18 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை விரைவாக மீட்க கோரி மத்திய அரசுக்கும் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 27 வயதான ஆதித்ய வாசுதேவன் என்பவர் அந்த கப்பலில் சிக்கியுள்ளார். அவரை விறைத்து மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க கோரி தமிழக முதல்வர் பழனிசாமி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பழனிசாமி, விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், "ஸ்டெனா இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களையும் விரைவில் விடுவித்து தாயகம் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகின்றோம். இது தொடர்பாக ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றோம். தெஹ்ரானில் உள்ள நமது தூதரக அதிகாரிகள் மாலுமிகளைச் சந்தித்துள்ளனர். அவர்கள் நலமாக இருப்பதாகத் தெரிகிறது" என தமிழில் பதிலளித்தார். மேலும் அவரின் இந்த தகவல் மூலம், தமிழக மாலுமி உட்பட இந்தியர்கள் அனைவரையும் மீட்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.