1801ம் ஆண்டுக்குப் பின்பு ஒரே நாளில் 116 செ.மீ. அளவு கொட்டித் தீர்த்த மழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட பேரழிவினைப் பார்வையிடவும் ஆய்வு செய்யவும் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார் முதல்வர் ஸ்டாலின். வந்த வேகத்தில் ஆய்வுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், முதலில் மறவன் மடம் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறி அவர்களிடம் சேத விபரங்களைக் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்த முதல்வர், மறவன் மடம் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த தூத்துக்குடி பாளை சாலையில் உள்ள அந்தோணியார்புரம் பாலத்தைச் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நிவாரண மையத்திற்கு வந்த முதல்வர், அம்மையத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப் பட்டிருந்த மில்லர்புரம், பிரையண்ட் நகர், அண்ணா நகர், ஆசிரியர் காலனி, சிலோன் காலனி போன்ற பகுதிகளைச் சேர்ந்த 600 பேர்களைச் சந்தித்தார். அவர்களுக்கு போர்வை, வேட்டி சேலை, பிஸ்கட் ரொட்டி, பால் போன்றவற்றை வழங்கினார். அங்கு அவர்களுக்கான மருத்துவ வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். எம்.பி.கனிமொழி அமைச்சர்கள் கீதாஜீவன், கே.என்.நேரு உடன் சென்றனர்.
பின்னர் எட்டயபுரம் ரோடு 3 வது ரயில்வேகேட் மேம்பாலம் சென்றவர், அங்கிருந்து மாநகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்டு உடனடியாக வெள்ள நீரை வெளியேற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டி அதிகாரிகளை விரைவுபடுத்தினார். வெள்ளம் சூழ்ந்த குறிஞ்சி நகர், போல்பேட்டை பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் பாதிப்பு விபரங்களைக் கேட்டறிந்தார். பொது மக்களிடம் பாதிப்பு விபரங்களையும் கேட்டறிந்த முதல்வர், அவர்களிடம் ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடிப் பகுதிகளில் ஆய்வை முடித்துவிட்டு பாதிப்பிற்குள்ளான நெல்லை பகுதிகளை ஆய்வு செய்ய வந்த முதல்வர் நெல்லையில் மழை வெள்ளம் பாதித்த ஜங்ஷன் பகுதிகளைப் பார்வையிட்ட பின் மாநகராட்சி அலுவலகம் அருகிலுள்ள வர்த்தக மையத்தில் நிவாரண பொருட்கள் வழங்கத் தயார் செய்யப்படும் பணியினைப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர், “1801 ஆண்டுக்குப் பின்பு பெய்த கடும் மழை, காயல்பட்டினத்தில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டியது, ஒரே நாளில் பெய்துள்ளது. சென்னை மக்களைப் போல தென் மாவட்ட மக்களையும் அரசு காக்கும் என்று உறுதி கூறுகிறேன். அனைவருக்கும் உரிய நிவாரணம் அளிக்கப்படும். 275 தேசிய பேரிடர் மீட்பு படையினர், 375 மாநில மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாமிரபரணியின் வெள்ளத்திற்கு ஏரல் மற்றும் தூத்துக்குடி நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. 147 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிக்காக உடனே பத்து அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்தது தவணை தானே தவிர; கூடுதல் நிதி அல்ல. தென்மாவட்ட மழை சேதாரங்களை இது வரையிலும் மத்திய அரசு கடும் பேரிடராக அறிவிக்கவில்லை. அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர், கூடுதல் நிதியைப் பெற்றுத்தர வேண்டும்” என்றார். அத்தோடு, அனைத்து மக்களுக்குமான நிவாரணத் தொகையினை அறிவித்தார் முதல்வர். இதனிடையே சேதவிவரங்களை முதல்வரிடம் தெரிவிப்பதற்காக அவரைச் சந்திக்க வந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள், மா.செ.வைக் கூட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தின் முன்பகுதியும், அதன் சாலையும் முக்கியமான பகுதி. விலைமதிப்புள்ள இயந்திரங்களைக் கொண்ட போட்டோ பார்க் லேப்கள், மெடிக்கல் ஏஜென்சியின் கடைகள், அது சார்ந்த ஹோல்சேல்ஸ் நிறுவனம், ஷாப்பிங் மால்கள் என்று அந்தப் பகுதியிலுள்ள ஏராளமான கடைகளும் பெரும் மதிப்பிலானவை.
மழை வெள்ளம் அந்தப் பகுதியிலுள்ள அனைத்துக் கடைகளிலும் உட்புகுந்து சர்வநாசத்தை ஏற்படுத்தியுள்ளன. பல நிறுவனக் கடைகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. மதிப்பிட முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளையோ, எம்.எல்.ஏ.க்களையே அனுமதித்திருந்தால் முதல்வரின் கவனத்திற்கு இவைகள் உட்பட மொத்த நிலவரத்தையும் அவர்கள் கொண்டு போயிருப்பார்கள். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு சிலரைக் கூட அனுமதிக்கவில்லை என்கிறார்கள்.
இதனிடையே வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையும் சேர்த்துக் கொண்டு வேகமாக ஸ்ரீவைகுண்டம் நோக்கிப் பாய்ந்து, பண்டாரவிளை மங்கலக்குறிச்சிப் பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்திவிட்டு, தூத்துக்குடி நகரத்தின் முக்கிய வியாபார ஸ்தலமான ஏரல் நகரையே துண்டித்து யாரும் உள்ளே நுழைய முடியாமல் செய்துவிட்டது. நிவாரண உதவிக்காக அங்கே சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திரும்பமுடியாமல் வெள்ளம் காரணமாக மூன்று நாட்கள் அங்கே சிக்கிக்கொண்டார். பின்னர் படகுமூலம் மீட்பு படையினரால் மீட்கப்பட்டிருக்கிறார். வெள்ளம் ஏறிய மக்கள் உணவு ஆகாரமின்றி மூன்று நாட்கள் பரிதவிப்பதையறிந்த எம்.பி.கனிமொழி யாரும் செல்ல முடியாத ஏரல் பகுதிக்கு டிராக்டர் மூலமாகச் சென்றவர் அங்கு ஏரியாவைச் சுற்றிப் பார்ப்பதற்கான வசதி இல்லாமல் போகவே பைக்கில் சென்று பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு அம்மக்களிடம் ஆறுதல் தெரிவித்தவர், நானும், முதல்வரும் இருக்கிறோம். என்றார். சற்றும் தாமதிக்காத கனிமொழி இரண்டு லாரிகளில் நிவாரணப் பொருட்களைக் கொண்டுவரச் செய்து ஏரல் மக்களுக்கு உதவி இருக்கிறார்.
முன்னதாக தூத்துக்குடியில் ஒரு பகுதியை முடித்துவிட்டு வேறுபகுதிக்குக் கிளம்பிய கனிமொழி, தங்களுக்கு மூன்று நாட்களாக நிவாரண உதவி கிடைக்கவில்லை என்று நகரின் மூன்றாவது மைலில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதையறிந்து அங்கே விரைந்தவர், அம்மக்களை சமாதானம் செய்து அவர்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்து விட்டுக் கிளம்பினார்.