![Kaniamoor School Issue: Sealing of 3rd floor; High Court action order](http://image.nakkheeran.in/cdn/farfuture/YOp9insLjwab9KF4vzz6HzoXfdd96iVXAbwH9nqGZiw/1677584657/sites/default/files/inline-images/18_64.jpg)
கலவரத்தால் மூடப்பட்ட கனியாமூர் பள்ளியை முழுமையாகத் திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மர்ம மரணம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கலவரத்தில் பேருந்துகள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இதனையடுத்து பள்ளியை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றது. சில மாதங்கள் முன்பு சீரமைப்புப் பணிகள் நிறைவுற்றதால் பள்ளியைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என பள்ளி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கொடுத்த பரிந்துரையை ஏற்று சீரமைப்புப் பணிகள் முழுமையாக நடந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் 504 மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் ஒரு மாதத்திற்கு நேரடி வகுப்புகளைத் தொடங்க உத்தரவிட்டார். எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புக்களைத் தொடங்குவது குறித்து பின்னர் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பள்ளியில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. அதனால் மற்ற வகுப்புகளையும் செயல்பட அனுமதிக்கக் கோரி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஆஜராகி நீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் பள்ளி செயல்பட்டு வருகிறது. அமைதியான சூழல் நிலவுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையையும் வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் உத்தரவுகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. பள்ளி முழுமையாகத் திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு எல்.கே.ஜி முதல் நான்காம் வகுப்பு வரை பள்ளியைத் திறக்க வேண்டினார். இதனை அடுத்து மார்ச் முதல் வாரத்திலிருந்து எல்.கே.ஜி முதல் அனைத்து வகுப்புகளும் முழுமையாகவும் நேரடியாகவும் வகுப்புகளைத் திறக்க நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும், குழந்தைகளுக்கு ஆதரவாக வரும் பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ஆதரவான வசதிகளை பள்ளி நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பள்ளியின் ஏ ப்ளாக் கட்டடத்தில் உள்ள 3 ஆம் தளம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதைத் தவிர அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் நீக்க உத்தரவிட்டார். 3 ஆவது தளத்திற்கு வைக்கப்பட்ட சீல் நீடிக்கும் என உத்தரவிட்ட நீதிபதி நடப்பு கல்வியாண்டு வரை பள்ளிக்கான போலீஸ் பாதுகாப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி அடுத்த கல்வி ஆண்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளியைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்த உயிரிழந்த மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.