கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி மின்னலுடன் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி அருகிலுள்ள நிறைமதி கிராமத்தைச் சேர்ந்த 55 வயது ஜெயக்கொடி என்பவர் ஆடு மேய்ப்பதற்காக நேற்று(13.4.2022) காட்டுப் பகுதிக்கு சென்று உள்ளார். திடீரென இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. அப்போது கடுமையான இடி மின்னல் தாக்கியதில் ஜெயக்கொடி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே ஜெயக்கொடி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல் பண்ருட்டி சேர்ந்த 42 வயது சீனிவாசன் என்பவர் இவர் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தென் கீரனூர் கிராமத்தில் அண்ணாமலையார் என்ற சிவன் கோவில் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. கோயில் அருகில் நின்று கொண்டிருந்த சீனிவாசன் இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். உயிரிழந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே அதே பகுதி கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த அமர்நாத் என்பவர் மின்னல் தாக்கியதில் நெஞ்சுவலி ஏற்பட்டு அவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத்தொடர்ந்து நேற்று அப்பகுதியில் இடி மின்னல் காரணமாக நிறைமதி கிராமத்தில் மூன்று ஆடுகளும், நீல மங்கலத்தில் ஒரு பசுமாடு, தென் கீரனூர் பகுதியில் ஒரு எருமை மாடு என இப்படி அடுத்தடுத்த கிராமங்களில் ஆடு மாடு மனிதர்கள் இடி மின்னல் தாக்கி இறந்து போயுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே நேரத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சில கிராமங்களில் இடி மின்னல் தாக்கியதும், ஆடு மாடு மனிதன் என அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.