தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர். நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி இல்லாத நிலையில் வீடுகளிலேயே கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. புதுச்சேரி மாநிலத்தில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் உற்சவமூர்த்தி தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமங்கலி நகர் பகுதியில் பொது இடத்தில் விநாயகர் சிலையை வைத்து இளைஞர்கள் வழிபட முயன்றனர். அப்போது, காவல்துறையினர் விநாயகர் சிலையை வைக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். மேலும், அப்பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம், இந்து முன்னணி அமைப்பினர் அனுமதியின்றி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர்.
அரசின் உத்தரவை மீறி மணலி சின்னசேக்காடு காந்தி தெருவில் மூன்று ஆயிரம் எவர்சில்வர் டம்ளர் கொண்டு 15 அடி உயரத்தில் மக்கள் வழிபாட்டிற்காக விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோவில் அருகே தடையை மீறி பொது இடத்தில் ஐந்து அடி சிலை வைத்து இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினர். இந்து முன்னணி சார்பில் திருவல்லிக்கேணி மார்க்கெட் அருகே மூன்று அடி சிலை வைத்து வழிபாடு நடத்தினர். புதுப்பேட்டை கோமலீஸ்வரன் கோவில் அருகே இந்து முன்னணி சார்பில் மூன்று அடி சிலை வைத்து வழிபாடு நடத்தினர்.