புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வடக்கு கிராமத்தில் உள்ள நரிக்குறவர் காலணியில் உள்ள பள்ளி வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று 1990-91 காலக்கட்டத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலாராணி சுங்கத் அறிவொளி இயக்கத்தை அங்கு தொடங்கி நரிக்குறவர் காலணியை அறிவொளி நகர் என்று பெயரும் மாற்றினார். அதன் பிறகு பெரியவர்கள் கையெழுத்துப் போட கற்றுக் கொண்டு தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தனர்.
ஆனாலும் தாங்கள் பிழைப்பிற்காக வெவ்வேறு ஊர்களுக்கு செல்லும் போது தங்கள் குழந்தைகளையும் கூடவே அழைத்துச் செல்வதால் அந்தக் குழந்தைகள் பள்ளி படிப்பைக் கூட முழுமையாக முடிக்கவில்லை. இருந்தும் தொடக்கப் பள்ளியில் படிக்க வைத்தனர். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் இடையில் நின்றுவிடுகின்றனர்.
இந்த நிலையில் தான் திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் கீரமங்கலம் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் அறிவொளி நகரில் இருந்து பள்ளி வயது குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை என்பதை அறிந்து மாவட்ட கல்வி நிரவாகத்திற்கு தகவல் அளித்த நிலையில் ஏ.பி.ஓ. தங்கமணி, இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உள்ளிட்டோருடன் அறிவொளி நகருக்குச் சென்று பெற்றோர்களை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய பிறகு பள்ளி செல்லும் வயதுடைய 32 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப உறுதி அளித்த பெற்றோர்கள் அடுத்த நாளே பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்றனர்.
அடுத்த சில நாட்களில் அனைத்துக் குழந்தைகளையும் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புகிறார்களா என்று மாலை நேரத்தில் அறிவொளி நகரில் வட்டாரக் கல்வி அலுவலர் ஆய்வு செய்த பிறகு, “நானும் படிக்கும் போது பல கி.மீ. நடந்து சென்று படித்தேன். அப்போது என் வீடும் உடைந்த சுவர்களைக் கொண்ட கூரை வீடு தான். வீட்டில் மின்சாரம் இல்லை. ஆனால் நான் படித்து அரசு வேலைக்கு வந்த பிறகு வீடு கட்டி இப்ப கார் கூட வாங்கிட்டேன். இதே போல உங்கள் குழந்தைகளும் படித்து வேலைக்கு வரவேண்டும். வீடு கட்டி கார் வாங்க வேண்டும். அதற்கு அரசாங்கம் கொடுக்கும் அத்தனை சலுகைகளையும் பெற்று நன்றாக படிக்க அனுப்ப வேண்டும்.
தற்போது சாதிச் சான்றிதழ் கூட பழங்குடியினரோடு சேர்த்து எஸ்.டி என்று கொடுக்க மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் கூடுதல் சலுகை கிடைக்கும். அதனால், அனைத்து குழந்தைகளையும் படிக்க பள்ளிக்கு அனுப்புங்கள். முதல் வகுப்பிலிருந்து முதுகலை படிப்பு வரை அரசாங்கமே அனைத்து செலவுகளையும் ஏற்று உணவு, சீருடை, புத்தகம், பை, பள்ளி செல்ல சைக்கிள், தொலை தூரம் செல்ல பஸ் பாஸ் இப்படி ஏராளமான சலுகைகளையும் கொடுக்கிறது” என்றார்.
அப்போது ஒரு மாணவி எழுந்து, “ஒரு நாள் உங்கள் காரில் எங்களை ஏற்றிச் செல்வீர்களா” என்று கேட்க, “நிச்சயம் ஒரு நாள் மாணவ, மாணவிகளை என் காரில் பள்ளிக்கு அழைத்துச் செல்வேன்” என்றார்.
சொன்னது போலவே இன்று வியாழக்கிழமை காலை அறிவொளி நகருக்கு காரோடு வந்தார் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன். அந்த நேரத்திலேயே ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பி சென்றுவிட்டனர். ஆனாலும் பள்ளிக்கு செல்ல தயாராக இருந்த மாணவர்களை அவர்கள் ஆசைப்பட்டது போல தனது ஏ.சி காரில் ஏற்றி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்டார். பள்ளி நிர்வாகத்தினரிடமும் கூறி அவரவர் வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இன்று காரில் செல்லாத மாணவ, மாணவிகளை பள்ளியில் சந்தித்து மற்றொரு நாளில் அழைத்து வருவதாக கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து ஒரு நாள் பள்ளிக்கு அனுப்புவதோடு தங்கள் கடமை முடிந்துவிடுவதாக கடந்து செல்லும் ஒரு சில அதிகாரிகளுக்கு மத்தியில் நரிக்குறவர் மாணவர்களும் நன்றாக படிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஆய்வுகள் செய்து கண்காணித்து வரும் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரனை பாராட்டி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள். ஒவ்வொரு அதிகாரியும் இப்படி இருந்தால் சிறப்பு தான்.