![Kallakurichi issue human rights commission](http://image.nakkheeran.in/cdn/farfuture/1eZtRlHLTU9lC4Lkm9MMPVNFBpZOJU6zn_uL1Q5ndXU/1602043740/sites/default/files/inline-images/kallakurichi-in_6.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆயந்தூரை சேர்ந்தவர் கட்டிட வேலை செய்யும் கொத்தனார் ஆறுமுகம். இவர் சில நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரது வீடு கட்டும் பணியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். இவரது உடலை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது.
மறுநாள் பிரேத பரிசோதனைக்காக உடலை வெளியே கொண்டுவந்தபோது இறந்த ஆறுமுகத்தின் உடலில் கால் கட்டைவிரல் உட்பட பல்வேறு இடங்களில் எலிகள் கடித்து குதறி இருந்ததைக்கண்டு மருத்துவமனை ஊழியர்களும், ஆறுமுகத்தின் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாநில மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆணயத்தின் தலைவர் துரை ஜெயச்சந்திரன் அவர்கள் ஊரக மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இறந்த ஆறுமுகம் உடலை எலி கடித்த சம்பவம் தொடர்பாக இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய உடலை எலி கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மனித உரிமை ஆணையம் தலையிட்டு விளக்கம் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.