சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வாழைப்பந்தல் என்ற பகுதியைச் சேர்ந்த 20 பேர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுலா வாகனத்தில் (வேன்) சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில் இவர்கள் வந்து கொண்டிருந்த வேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இடதுபுறத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதே சமயம் இந்த சிக்கி படுகாயமடைந்த 14 பேரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமான அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் ஆர் சதுர்வேதி நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.