திருச்சி உறையூர், காந்திபுரத்தைச் சேர்ந்த சினேகா என்பவருக்கும், புள்ளம்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்தின் போது 17 பவுன் நகை, சீர்வரிசை, 5 லட்சம் திருமண செலவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பின்னரும் சினேகாவின் மாமியார் சகாயராணி என்பவர் கொடுமைப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவி இருவரும் தனிக்குடித்தனம் வந்துள்ளனர்.
அப்போது கணவர் விஜயகுமார், தனது அக்கா மெடிக்கல் ஷாப் வைப்பதற்காக 5 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்துள்ளார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு விஜயகுமார் மட்டும் புள்ளம்பாடி சென்ற நிலையில் சினேகா தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தற்கொலை வழக்காக திருச்சி கோட்டை மகளிர் போலீசார் பதிவு செய்தனர். ஆர்டிஓ விசாரணை முடிந்ததை தொடர்ந்து உயிரிழந்த சினேகாவின் கணவர் விஜயகுமார், தாயார் சகாயராணி ஆகியோர் மீது தற்கொலைக்கு துாண்டுதல் பிரிவின் கீழ் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.