மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கலைஞரின் பிறந்தநாள் விழாவை, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாட வேண்டும் என சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ கேட்டுக்கொண்டு உள்ளார்.
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை; பெரியாரின் கொள்கைகளையும், லட்சியங்களையும் உயிர் மூச்சாகக் கொண்டு, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழினம், தமிழ்மொழி காக்கும் பொறுப்பினை தன் தோளில் சுமந்து வெற்றிநடை போட்டவர் கலைஞர். 1969ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்ச்சமுதாய மக்களின் நலன் காக்கும் எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளார்.
ஏழை எளியவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மகளிர், நெசவாளர்கள் வணிகர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என அனைத்து தரப்பினரின் நல் வாழ்வுக்காக பாடுபட்டவர். அவருடைய வழியில் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வராக கலைஞரின் வழியில் உலகம் போற்றும் நல்லாட்சியைத் தந்து கொண்டிருக்கிறார். மறைந்த தலைவரின் 99வது பிறந்த நாள் விழா, ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அந்நாளில், சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் இணைந்து அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, புகழ் வணக்கம் செலுத்தி, கட்சி கொடியேற்றிட வேண்டும். ஏழையெளிய, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் நடத்திட வேண்டும். கலைஞரின் பொற்கால ஆட்சியின் சிறப்பையும் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் ஆட்சியின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை நலத்திட்டங்களையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். கட்சியின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கடைசி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்திடும் வகையில் ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராஜேந்திரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.