இந்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு கோவிலில் நடந்த பயிற்சியில் இரண்டு துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பட்டுள்ளது.
இந்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்களுக்கு மூன்றுநாள் கலை மற்றும் பண்பாட்டு பயிற்சி புதுக்கோட்டை வட்டார வளமையத்தில் மாவட்டக் கருத்தாளர் சந்திரசேகரன் ஒருங்கிணைப்பில் நடந்துவருகிறது.
இரண்டாம்நாள் பயிற்சிக்கு சிறப்பு கருத்தாளர்களாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிர்வாகிகள் கரு.ராஜேந்திரன் , மணிகண்டன் பங்கேற்று கொடும்பாளூர் மூவர் கோவில், ஐவர் கோவில், இதில் முதுகுன்ற முடையார் கோவில் ஆகிய இடங்களின் வரலாற்று பின்னணிகளை பகிர்ந்துகொண்டனர்.
முதுகுன்ற முடையார் கோவிலில் நடந்த பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக மறைந்து கிடந்த இரண்டு துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தொல்லியல் ஆய்வுக்கழக நிர்வாகிகள் மணிகண்டன் , ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது,
புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க மூவர் கோவில் பூதி விக்கிரமகேசரியாலும், முதுகுன்ற முடையார் என கல்வெட்டுகளில் உள்ள முசுகுந்தேஸ்வரர் கோவில் மகிமாலைய இருக்குவேள் என்பவரால் முதலாம் பராந்தகன் காலத்தில் கட்டப்பட்டது. அது மட்டுமின்றி மணிக்கிராமம் எனும் வணிகக்குழுவின் தலைநகராக விளங்கிய கொடும்பாளூர் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும்,
இவ்வூரில் பல நூற்றுக்கணக்கான வரலாற்று சான்றுகள் இன்னும் அறியப்படாமலேயே உள்ளன. அவற்றின் ஒருபகுதியாக இரண்டு கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் மங்கல வரியுடன் “கோப்பரகேசரி பந்மரான சக்கரவர்த்திகள் குலோத்துங்க சோழ தேவற்குயாண்டு 17 ஆவது (இரட்டைபாடி கொண்ட சோழ வளநாட்டு” என்ற குலோத்துங்க சோழரின் பதினேழாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட முற்று பெறாத துண்டு கல்வெட்டும், கொற்றக்குடைப்பன்மை முந்நூற்றுவரும் பக்கல்... வலப்பாடி நிலத்துள் கரைக்கிழச்செய்யும் வே(லை) என்று பொறிக்கப்பட்ட வணிகக்குழுவின் கல்வெட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் போது இதுவரை பதிவு செய்யப்படாத கல்வெட்டுகள் மறைந்து கிடந்து அடையாளம் கண்டது பெருமகிழ்ச்சியாக இருந்தது என்றனர் அங்கு பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்கள்.