கவிஞர் வைரமுத்து அவர்கள் தமிழாற்றுபடை என்ற தலைப்பில் சங்க காலத்து புலவர்கள் பற்றிய ஆவணக்கட்டுரைகளை அரங்கேற்றி வருகிறார். அந்த வரிசையில் சமிபத்தில் ஒளவையார் தமிழாற்றுபடை அரங்கேற்ற விழாவில் கவிஞர் கபிலன் வைரமுத்து நிகழ்திய உரையின் தொகுப்பு.
நான் நினைவு தெரிந்ததிலிருந்து பல இலக்கிய விழாக்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் விசில் சத்தம் கேட்கிற விழா கவி பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை அரங்கேற்ற விழாதான். விசில் என்பதை விசில் என்றும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஜனரஞ்சகத்தின் குறியீடாகவும் கொள்ளலாம் அல்லது பார்வையாளர்களின் அதீத ஈடுபாடாகவும் எடுத்துக்கொள்ளலாம். சில அறிஞர்கள் இலக்கிய விழாக்களில் என்ன ஜனரஞ்சகம், இலக்கிய விழாக்கள் யாகம்போல், தியானம்போல், உள்ளுணர்வின் தளத்தில் இருந்தால் போதாதா என வாதிடுவார்கள். ஆனால், தமிழ் வெறும் அறிஞர்களின் மொழி அல்ல, தமிழ் கொண்டாட்டத்தின் மொழி, திருவிழாக்களின் மொழி, இந்த மண்ணின் அற்புதமான ஓசைகளை கொண்டு உருவான மக்களின் மொழி. இந்த மொழிக்கு ஆய்ந்தறிதலும் வேண்டும் ஆரவாரமும் வேண்டும்.
பொதுவாக வெற்றித்தமிழர் பேரவை கவிஞரின் தலைமையில் இலக்கிய விழாக்களை நடத்துகிறபோது உற்சாகம் இருக்கும், எனினும் வழக்கத்திற்கு மாறான கூடுதல் உற்சாகத்தையும் வரவேற்பையும் இந்த தமிழாற்றுப்படை அரங்கேற்ற விழாக்களில் காணமுடிகிறது. ஏனென்றால் ''தினமணி'' நாளிதழில் ஒரு கட்டுரை தொடராக இது தொடங்கியது. கவிஞர், கட்டுரைகளை எழுத தொடங்கினார். ஒரு குறுகிய வட்டத்திற்குள்தான் இவை நடந்துகொண்டிருந்தன, ஒரு குறிப்பிட்ட கட்டுரைக்கு சில இடர்பாடுகள் வந்தன. அந்த இடர்களுக்கு பிறகு இலக்கியமாக இருந்த தமிழாற்றுபடை இயக்கமாக மாறியது. எங்கள் மொழியில் கூறவேண்டுமென்றால் 'ஆவணப்படமாக தொடங்கப்பட்டது ஆக்ஷன் படமாக மாறிவிட்டது'. இது ஒரு புறக்காரணம், எனக்கு என்ன ஆச்சர்யமென்றால், கவிஞர் கட்டுரையை வாசிக்க தொடங்கி முடிக்கிற வரையில் அனைவரும் கவனம் சிதறாமல் அவரோடு பயணிப்பது எப்படி என்பதுதான். ஏனென்றால் அவர் படிப்பது ஒரு ஆராய்ச்சி கட்டுரை. எந்த ஆராய்ச்சி கட்டுரை வாசித்தாலும் இப்படி வரவேற்பார்களா என்றால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. பிறகு இங்கு மட்டும் இது எப்படி சாத்தியமென்றால், இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள். இவர்களுக்கு தமிழின் மீதான பற்றில் இது நடக்கிறதா, அல்லது கவிஞர் மீதுள்ள பற்றினாலா அல்லது கவிஞர் தனக்கே உண்டான ஏற்ற இறக்கங்களுடன் படிப்பதால் இது நடக்கிறதா என்றால், இதில் எல்லாமே உண்மையென்றாலும், இதை தாண்டிய உண்மை இருப்பதாக தோன்றுகிறது. கட்டுரை அரங்கேறப்போகிறது என்று, என்று முடிவானதோ அன்றே வாசிப்பு தன்மை, சொற்பொழிவு தன்மை இரண்டையும் கொண்டே கவிஞர் அதை உருவாக்க தொடங்கிவிட்டார். இந்த உருவாக்கமே புதிது. இந்தக் கட்டுரையை ஆராய்ந்து பார்த்தால், அதில் வரலாற்று குறிப்புகள் இருக்கும், தகவல்கள் இருக்கும், விவரங்கள் இருக்கும், விளக்கங்கள் இருக்கும், அதோடு ஒரு சிறுகதைக்கான ஓட்டம் இருக்கும் ஆக இந்தக் கட்டுரை என்ற வடிவத்தை அதன் கம்பீரம் குறையாமல் மக்கள்மயமாக்கிக் கொண்டிருக்கிறார் கவிஞர்.
எப்படி இந்தக் கட்டுரை மேடை இவருக்கு புதிதோ அதுபோல இந்த படைப்பனுபவமே புதிதுதான். இதுவரைக்கும் அவரது நூல்கள் அனைத்தையும் மக்கள் ஊடகமாகத்தான் பார்க்கிறேன். கள்ளிக்காட்டு இதிகாசம் பேயத்தேவரின் வாழ்வு. பேயத்தேவரின் வாழ்வு, கவிஞர் வாழ்வோடு கலந்த வாழ்வு. கருவாச்சி காவியம் அதன் இன்னொரு பரிணாமம், மூன்றாம் உலகப்போர் அவர் நிலத்தில் நின்றுகொண்டு உலகத்தை பார்த்த பார்வை. அவரது சிறுகதைகள் அவர் வாழ்வில் சந்தித்த மனிதர்களின் தாக்கங்கள். ஆக இதுவரைக்கும் அவர் படைத்த எல்லா நூல்களிலும் அவர் நூலே ஊடகமாகவும், அவர் வாழ்வே செய்தியாகவும் இருந்திருக்கிறது. ஆனால், தமிழற்றுப்படையில் தமிழை இத்தனை நூற்றாண்டுகளாக சுமந்து வந்த முன்னோர்களின் வாழ்வை செய்தியாக்கி அதற்கு தானே சகலகலா ஊடகமாக செயல்படுகிறார். இதை அவரது எழுத்தின் அடுத்தகட்டமாக பார்க்கிறேன். ஒரு எழுத்தாளன், தன் எழுத்தில் மறைய மறைய அந்த எழுத்து ஒரு நிரந்தரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறன்.
இந்த தமிழாற்றுப்படையை பொறுத்தவரையில், கவிப்பேரரசு அவர்கள் ஒரு முக்கியமான உளவியலை கையாண்டிருக்கிறார். சமகாலத்தில் இருக்கிற இருவர் முயற்சி செய்தால் ஒருவர் மற்றோருவர் இடத்தில் இருந்து அவரை புரிந்துகொள்ள முடியும். ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்களை அவர்களின் காலத்திற்கே சென்று, அவர்களின் இடத்தில் நின்று, இந்த மண்ணின் மொழியை, கலையை, இலக்கியத்தை, அறத்தை, ஆராய்ந்து இந்தக் கட்டுரைகளை அவர் படைத்துக் கொண்டிருக்கிறார். கபிலர் கட்டுரை அரங்கேற்ற விழாவில் அவர் கூறியிருந்தார் "குறிஞ்சி நிலத்தை கண்டு நான் மயங்கிவிட்டேன். ஒரு மாதமாவது குறிஞ்சி நிலத்தில் நான் வாழவேண்டுமென ஏங்கினேன்" என்று. அவருக்கு தெரிந்திருக்கவில்லை, அவ்வாறு அவர் வாழ்ந்ததால்தான் அந்தக் கட்டுரையை அவர் எழுத முடிந்தது. இவ்வாறு ஒருவரை அவருடைய இடத்திலிருந்து புரிந்து கொள்வது "எம்பத்தி" என்று கூறுவார்கள். பெருநிறுவனங்களின் வேலைக்கான அடிப்படை தகுதியாக "எம்பத்தி" பார்க்கப்படுகிறது. பெருநிறுவனங்களில் மட்டுமல்ல அரசியலிலும் இது அவசியமான ஒன்று. "கஜா" புயலை விவசாயிகள் இடத்திலிருந்தும் ''ஓகி'' புயலை மீனவர்களின் இடத்திலிருந்தும் பார்க்கிற எம்பத்தி அரசாங்கத்திற்கும் வேண்டும். இத்தகைய புரிதலுக்கு எடுத்துக்காட்டாக கவிஞர் வைரமுத்துவின் கட்டுரைகள் திகழ்கின்றன” என்று அவ்விழாவில் கபிலன் வைரமுத்து பேசினார்.