கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. தமிழக அளவில் இந்தத் துறையிலே பெரிய பள்ளியாக இது செயல்பட்டு வருகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு சாமி சகஜானந்தா ஏழை எளிய மக்கள் கல்வியால் மட்டும் தான் முன்னேற முடியும் என்ற உயரிய சிந்தனையின் அடிப்படையில் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் அதிக பள்ளிகள் இல்லாததால் நந்தனார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரகணக்கில் இருந்தது. நந்தனார் பள்ளியில் சேர்க்கை கிடைக்குமா? என்ற நிலையில் ஒருங்கிணைந்த தென்னார்காடு மாவட்டமாக இருந்தபோது பல ஆயிரம் ஏழை மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயின்றுள்ளனர். அப்படி கல்வி பயின்றவர்கள் தற்போது தமிக அளவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் உயரிய பதவிகளில் உள்ளனர்.
அந்தநிலையில் மாணவர்கள் தங்கி கல்விகற்க வசதியாக பள்ளியின் அருகே விடுதி அமைத்து தரவேண்டும் என்று அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜரிடம், ஒருங்கினைந்த சிதம்பரம் எம்எல்ஏவாக இருந்த சாமி சகஜானந்தா கோரிக்கை விடுத்தார். இதனைத்தொடர்ந்து பள்ளியை ஆய்வு செய்த காமராஜர் 1956-ஆம் ஆண்டு நந்தனார் ஆண்கள் பள்ளியின் அருகில் மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் வசதியுடன் இரண்டு அடுக்கு விடுதி 65 அறைகளுடன் கட்டப்பட்டது.
இந்த விடுதியில் கடந்த 1995-ஆம் ஆண்டுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று உள்ளனர். அதனைத்தொடர்ந்து விடுதியை அரசு சரியாக பராமரிக்காததால் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தற்போது மாணவர்கள் 300 பேர் மட்டுமே தங்கி வருகிறார்கள். அதுவும் பலபேர் விடுதியின் கட்டிடம் மிகவும் பழுதாகி உள்ளதால் தங்க முடியாத சூழலில் இரவு நேரத்தில் 200 பேர் மட்டுமே தங்குவதாக கூறுகின்றனர். விடுதியின் உள்ளே மாணவர்கள் தங்கும் அறைகள், மேற்கூரையின் காரைகள் விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது மேற்கூரையின் காரைகள் இடிந்து விழுமோ என்ற பயமும் மாணவர்கள் மத்தியில் உள்ளது.
மேலும் மாணவர்கள் தங்கும் அறைகளில் கதவு, ஜன்னல் உள்ளிட்ட அனைத்தும் உடைந்துள்ளது. மழைநேரங்களில் மேல்தளத்தில் உள்ள அறைகளின் மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே வந்து கீழ்தளத்தின் அறையில் கசிவு ஏற்படுகிறது. எனவே இது மாணவர்கள் தங்கவே தகுதியில்லாத கட்டிடமாக உள்ளது என்று விடுதி மாணவர்கள் கூறுகிறார்கள்.
இதகுறித்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் விடுதி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகள் விடுதியின் கட்டிடம் மிகவும் பழுதான நிலையில் உள்ளது. மாணவர்களின் நலன் கருதி புதிய விடுதி கட்டிகொடுக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது விடுதிகட்டிடத்தின் சில கட்டுமான பணிகளை மட்டும் செய்து வர்ணம் பூசி பல லட்சங்களை செலவு செய்ததாக கணக்கும் காட்டியுள்ளனர். இதேபோல் பலமுறை இந்த விடுதியை சீர் செய்வதாக பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
மேலும் இதுகுறித்து விடுதி மாணவர் ஒருவர் கூறுகையில் 65 அறைகள் உள்ள விடுதியில் 20 அறைகள் தான் பயன்படுத்தமுடிகிறது. அதிலும் சில அறைகளின் மேற்கூறையின் சிமண்ட் காரை இடிந்து விழுந்துள்ளது. மீதி காரைகள் எப்போது விழுமோ என்ற பயத்தில் தினமும் தூங்கி எழுகிறோம். கடந்த 10 தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் விடுதியை ஆய்வு செய்தார். அப்போது எதுவுமே விடுதியில் சரியில்லை என்று விடுதி காப்பாளரை பணிநீக்கம் செய்துள்ளார். அரசு சரியான முறையில் விடுதியின் கட்டிடத்தை பராமறிக்க எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. விடுதி மாணவர்களுக்கு கழிவறை வசதிகள் கூட கிடையாது மாணவர்கள் அனைவரும் திறந்த வெளியே பயன்படுத்தி வந்தோம். ஆட்சியர் ஆய்வுக்கு பிறகு விடுதி காப்பாளர் பழனி 15 ஆயிரம் செலவு செய்து விடுதியின் உள்ளே கழிவறை வசதி செய்து கொடுத்துள்ளார். அந்த கழிவறையின் மேல்தள சிமண்ட் காரைகள் எப்போ இடிந்து விழுமோ என்ற நிலையில் தான் உள்ளது. எனவே அரசு உடனடியாக இந்த கட்டிடத்தை மாணவர்கள் தங்குவதற்கு லாயக்கற்ற கட்டிடமாக அறிவித்து 500 பேர் மட்டும் தங்கும் அளவிற்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய விடுதி கட்டிடத்தை கட்டிகொடுக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுகுறித்து நந்தனார் ஆண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரும், விடுதி காப்பாளர் (பொறுப்பு) குகநாதன் கூறுகையில், இந்த கட்டிடம் கட்டி 62 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கட்டிடத்தின் பல பகுதிகள் சிதிலம் அடைந்துள்ளது. மாணவர்கள் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது அரசு சார்பில் 30 அறைகள் கொண்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் மாணவர்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வந்துவிடும். தற்போது கல்வி பயிலும் கட்டிடத்தை தற்காலிக விடுதியாக மாற்ற முடிவு செய்துள்ளோம் என்றார்.
இதேபோல் நந்தனார் பள்ளியின் வாளகத்தில் தொடக்கபள்ளி இரண்டு தளத்துடன் இயங்கி வந்தது. அந்த கட்டிடமும் மிகவும் சேதமடைந்ததால் அருகில் ஒரு சிறிய கட்டிடத்தில் ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே அறையில் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். இதனை அரசு ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை. கட்டிடம் தானக இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டால் தான் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வர்கள். மேலும் பள்ளி வளாகத்தில் தேவையற்ற கட்டிடங்கள் பல உள்ளது. அதனை இடித்து தரைமட்டமாக மாற்றவேண்டும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.