
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வந்த பழனிகுமார் கடந்த 9 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராகப் பணியாற்றி வந்த பா. ஜோதி நிர்மலாசாமியைத் தேர்வு செய்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்காகத் தமிழக அரசு அனுப்பியிருந்தது.
இதற்கு ஆளுநர் உரிய ஒப்புதல் அளித்ததையடுத்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமியை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார். தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களை நடத்துவது தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் முக்கிய பணியாகும்.