“எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் நமது இயக்கத்தின் நலன் கருதி எனது உண்மையான பங்களிப்பை எந்நாளும் அளித்திருக்கிறேன் என்ற எண்ணம் என்னிடம் உள்ளது” என சுற்றுப்பயணத்தில் சசிகலா கூறியுள்ளார்.
தமிழகத்தில் பல பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். அந்த வகையில் ஈரோடு, நாமக்கல், சேலம் போன்ற பகுதிகளில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா நாமக்கல் பள்ளிப்பாளையம் பகுதியில் உரையாற்றினார்.
அதில் “நான் இருக்கிற வரை நமது இருபெரும் தலைவர்களின் புகழ் இந்த பூமியில் இருக்கும். ஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இந்த பகுதியில் அமைத்து தர வேண்டும் என்றும் பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பல்வேறு திட்டங்கள் இந்த மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதை இந்த திமுக அரசு நிறைவேற்றித் தர வேண்டும். அவ்வாறு இல்லை எனினும் விரைவில் நமது ஆட்சி அமையும். அப்போது இந்த பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என கூறினார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “திமுக தேர்தல் வாக்குறுதிகளாக பெரிய புத்தகங்களை கொடுத்தது. ஆனால் அதை எதையும் நிறைவேற்றவில்லை. மின்சார கட்டண உயர்வை பொறுத்த வரை ஏழை மக்கள் மேல் கை வைத்து விட்டனர். எனது சுற்றுப் பயணத்தில் தமிழக மக்களின் வரவேற்பு அதிகமாக உள்ளது. எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது. ‘ஜெயலலிதாவை போல் இவரை நம்பினால் கண்டிப்பாக செய்வார்’என்ற நம்பிக்கை எல்லா ஊர் மக்களிடமும் தெரிகிறது. ஓபிஎஸ் கட்சியில் சேர்ந்தால் இணைத்துக் கொள்வீர்களா என கேட்கின்றனர். நான் தான் எல்லாரையும் சேர்த்துக் கொள்கிறேன் என சொல்கிறேனே. அதிமுக கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் எனக்கு முக்கியம்” என கூறினார்.