ஜார்கண்ட் மாநில ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''மீண்டும் ஒரு ஆளுநர் பதவியை குடியரசுத் தலைவரும் பிரதமர் மோடியும் அளித்திருப்பது அவர்கள் தமிழ் இனத்தின் மீது; தமிழ் கலாச்சாரத்தின் மீது; தமிழ் பண்பாட்டின் மீது; தமிழ் மொழியின் மீது; தமிழர்கள் மீது அவர்கள் எத்தகைய மகத்தான பாசமும் மரியாதையும் பெருமையும் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது.
ஒரே மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆளுநராக அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆளுநராக இருப்பது என்பது புதிய வரலாறு. எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற பதவியின் மூலமாக அதுவும் குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்திற்கு ஆளுநர் பதவி தரப்பட்டிருப்பது அங்கே இருக்கிற பழங்குடி இன மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சமுதாயத்தின் அடித்தட்டில் இருக்கிற மக்கள் வாழ்கின்ற மாநிலத்தில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஜார்கண்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் புதிய பாலத்தை உருவாக்குவோம். இதன் மூலம் இரண்டு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற திட்டங்கள் உருவாக்கப்படும். இந்த வாய்ப்பை அந்த ஏழை எளிய மக்களின், பழங்குடி மக்களின், தாழ்த்தப்பட்ட மக்களினுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் செயல்பட முடியுமோ அதை மனதில் வைத்து பணியாற்றுவேன்.
ஆளுநர் அரசியல் குறித்து அதிகம் பேசாமல் இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். வக்கீலாக இருக்கும் போது கட்சிக்காரர்களுக்கு வாதிடுவது நியாயம். நீதிபதியாக வந்து விட்டால் நீதியை மட்டுமே தரவேண்டும். அரசியலில் இருந்து பரிணாம வளர்ச்சியில் ஆளுநர் பதவிக்கு வந்துவிட்டால், அரசியலில் நாட்டம் கொள்ளாமல் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது தான் சிறந்தது. ஆளுநர் பதவி எனக்கு கிடைத்த பெருமையாக நினைக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறேன். மோடிக்கும் குடியரசுத் தலைவருக்கும் தமிழ் இனத்தின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.