கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய அமைச்சர் ஒருவரின் பினாமியாக தன்னைக் காட்டிக் கொண்டு எல்.இ.டி. பல்பு, கொரோனா காலத்தில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு என பல புகார்களில் சிக்கிய ஏ.டி. பஞ்சாயத்து கிளர்க் கடுக்காக்காடு முருகானந்தம் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேல் சோதனைகள் செய்தனர்.
இதையடுத்து தன்னையும் தன் சொத்துகளையும் பாதுகாத்துக் கொள்ள பா.ஜ.க. கருப்பு முருகானந்தம் மூலமாக அவர் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். கட்சியில் சேர்ந்த சில வாரங்களிலேயே புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. பொருளாளர் பதவியும் பெற்றுக்கொண்டார். இவர் மீது ஏராளமான புகார்கள் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புகார் வழக்காகப் பதிவாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கரம்பக்காடு இனாம் கிராமத்தைச் சேர்ந்தவர் இப்ராஹீம் மகன் சாகுல் ஹமீது (49). இவர், கடந்த மாதம் திருச்சி சரக டி.ஐ.ஜி.யிடம் ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், புதுக்கோட்டை சார்லஸ் நகரில் வசிக்கும் வீரய்யா மகன் முருகானந்தம் தொழில் செய்வதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு என்னிடம் ரூ. 60 லட்சத்தை 2 தவணையாகப் பெற்றார். அதன் பிறகு பணத்தை திருப்பித் தரவில்லை. பல முறை கேட்டும் பணம் தரவில்லை.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி எனது செல்போனுக்கு அழைத்துப் பேசிய முருகானந்தம், பணத்தை திருப்பித் தர முடியாது என்று சொன்னதுடன், என்னையும் என் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாகப் பேசி கொலை மிரட்டல் செய்தார். மேலும், என்னை மதரீதியாகவும் இழிவாகப் பேசினார் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் புகார் கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்துள்ள நிலையில், முருகானந்தம் மீது ஐ.பி.சி. 406, 420, 507 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் உதவி ஆய்வாளர் குமரவேல் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதே போல திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம் உறவினரான கறம்பக்குடி களந்திரான்பட்டு மணல் கரிகாலன் கொடுத்த புகாரின் பேரில் முருகானந்தம் மீது புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.