தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கவும், திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று முன் தினம் மதுரைக்கு வந்தார். அவரை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து இன்று 30ம் தேதி காலையில் முதன்முதலில் தேனியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறார். அதன் பின் மாலையில் திண்டுக்கல்லில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் கலந்து கொண்டு 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறார். இதற்காக ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை டேமில் ஓய்வெடுப்பதற்காக மதுரையிலிருந்து கார் மூலமாக வந்த முதல்வர் ஸ்டாலின், உசிலம்பட்டியில் உள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து ஆண்டிபட்டி கணவாயில் முதல்வர் ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் உள்பட கட்சி பொறுப்பாளர்களும் அதிகாரிகளும் முதல்வரை வரவேற்றனர். அதைத் தொடர்ந்து ஆண்டிபட்டி வரை வழிநெடுகிலும் நின்று முதல்வரை பொதுமக்களும் கட்சிக்காரர்களும் வரவேற்றனர்.
ஆண்டிபட்டி வந்த முதல்வர் திடீரென பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள காவலர்கள் குடியிருப்பு பகுதிக்குச் சென்று அங்குள்ள காவலர்களின் வீட்டுக்குள் திடீரென நுழைந்ததை கண்டு காவலர்கள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். தமிழக முதல்வர் நம் வீட்டுக்கு திடீரென வந்ததைக் கண்டு பூரித்துப் போய் அவரை வரவேற்று வீட்டுக்குள் அமர வைத்தனர். அப்போது முதல்வர் அவர்களிடம் என்ன சாப்பாடு ரெடி பண்ணி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு தோசை இருக்கு சாப்பிடுகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு முதல்வர் உங்களுக்கு அளவுதான் வைத்திருப்பீர்கள் பரவாயில்லை தண்ணீர் மட்டும் கொடுங்கள் என்று கூறி தண்ணீரை குடித்து விட்டு குறைகளையும் கேட்டறிந்தார். மேலும், காவலர்கள் குடியிருப்புகளையும் ஆய்வு செய்தார். அப்போது முதல்வருடன் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடனிருந்தார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், வைகை டேமிபில் உள்ள பயணிகள் விடுதியில் தங்கினார். தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக தேனி அரசு விழாவிற்கு வந்திருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.